

பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் தமிழ்நாடு செய்தியாளர்களை சந்தித்தார், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் செல்ல பெருந்தகை. அதில் தவெக அரசின் ஆறுமாத ஆட்சி, அதன் நிலைபாடு, கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ சர்ச்சை மற்றும் மேகாதாது அணை குறித்து பேசியிருந்தார்.
தவெக அரசு குறித்து பேசிய செல்வபெருந்தகை, ஆட்சி பொறுப்பேற்று ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு இன்னும் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும், பொதுமக்களின் எதிர்பார்ப்பை எட்டும் வகையில் முழுமையான திருப்தி அளிக்கும் நிலையில் அது இல்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், "திரைப்படங்களில் பேசும் வசனங்களை நிஜ வாழ்க்கையில் எளிதில் செயல்படுத்த முடியாது என்பதற்கு இந்த ஆறு மாத ஆட்சி ஒரு சாட்சி" என்றும் காட்டமாக சாட்டியிருந்தார். செஞ்சியில் காணாமல் போன சிறுமியை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர் கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகார் குறித்து பேசினார்., "மாவட்ட ஆட்சித் தலைவருக்கே உரிய பாதுகாப்பு உள்ளதா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் யார் தவறு செய்தார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும். தவறு செய்தவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், ஏன் அமைச்சராகவே இருந்தாலும் தவறு தவறுதான். அதில் எந்தவித சமரசமும் இருக்கக் கூடாது. அந்தப் பெண் மாவட்ட ஆட்சித் தலைவர் மிகவும் கண்ணியமானவர். இத்தகைய நேர்மையான அதிகாரிகளுக்கு நேர்ந்த இந்தச் சம்பவம் குறித்து அரசு உடனடியாக தலையிட்டு, மக்களுக்கு உரிய தெளிவை ஏற்படுத்த வேண்டும்.
எனவே, தமிழக அரசும், மாண்புமிகு முதலமைச்சரும் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தி ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.
கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் முயற்சி குறித்துப் பேசிய அவர், "உச்ச நீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பின்படி, தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது. கடந்த கால அரசுகளைப் போலவே, தற்போதைய அரசும் சட்டப் போராட்டங்களை தீவிரமாக முன்னெடுத்து, கர்நாடகத்தின் இத்தகைய முயற்சிகளை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது" என்றார்.
அதை தொடர்ந்து.. செய்தியாளர் ஒருவர் “மாணிக்கம் தாகூர் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் பாவம் என்று கூறியுள்ளார்.. அது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு “அதை அரசியலாக்க வேண்டாம்” என கேட்டுக்கொண்டார். அதேநேரம், எப்ஸ்டீனைப் பாவம் என்று சொல்ல முடியுமா? அல்லது ஜெம் கிரானைட் வீரமணியைப் பாவம் என்று சொல்ல முடியுமா? யாரைத்தான் பாவம் என்று விட்டுவிட முடியும்? தவறு செய்தால் அது தவறுதான். அதில் எந்த சமரசமும் இருக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் அரசு ஏன் இந்த விஷயத்தில் மௌனம் காக்கிறது என்பது தெரியவில்லை.
ஒரு கட்சியின் முன்னாள் மற்றும் இந்நாள் மாநில தலைவர்கள் சமீப காலமாக சில விஷயங்களில் வெவ்வேறு கோணங்களில் பேசி வருவதை பார்க்கமுடிகிறது. காங்கிரஸ் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளித்து அமைச்சரவையில் இடம்பெற்றது. அதனையடுத்து நாடாளுமன்ற தேர்தலிலும் தவெக-யுடன் கூட்டணி என்ற முடிவையும் அறிவித்திருந்தது. இந்த நிலைப்பாட்டியில் உட்கட்சி முரண் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. தவெக உடனான கூட்டணியை முக்கிய நிர்வாகிகள் சிலர் விரும்பவில்லை என்றும் விமர்சனங்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் இது போன்ற இருவேறு கருத்துக்கள் வருவதாகவும் கூறப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்