

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற "சமத்துவ கிறிஸ்துமஸ்" விழாவில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், குழந்தையுடன் வந்த ஒரு பெண்ணிடம் சற்றே கோபமாகப் பேசிய சம்பவம் லேசான சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
த.வெ.க தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு சிறு குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் என கட்சித் தலைமை ஏற்கனவே அறிவுறுத்தியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கூட்ட நெரிசலுக்கு இடையே ஒரு பெண் தன் சிறு குழந்தையுடன் அங்கு வந்துள்ளார்.
இதைக் கண்ட பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அந்தப் பெண்ணை தடுத்து நிறுத்தி, "குழந்தையை கூட்டிட்டு வராதீங்கன்னு சொன்னோம்ல? அப்புறம் ஏன் கூட்டிட்டு வந்தீங்க? இது உங்க நல்லதுக்குத் தான் சொல்றோம். கூட்டத்துல குழந்தைக்கு ஏதாச்சும் ஆனா என்ன பண்றது?" என்று சற்றே கடுப்பான குரலில் அறிவுரை கூறினார்.
முதலில் கோபமாகப் பேசினாலும், பின்னர் அந்தப் பெண்ணின் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, "கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, நான் உங்களுக்குத் தனியா உட்கார இடம் ஏற்பாடு பண்றேன்" என்று கூறி அவர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தளபதியின் அறிவுறுத்தலின்படி விழா மிகச் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். பாதுகாப்பு காரணங்களுக்காகவே குழந்தைகளை அனுமதிக்கவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.