கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்; வீடு வீடாக விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணி!

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்; வீடு வீடாக விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணி!
Published on
Updated on
1 min read

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்திற்கு, வீடு வீடாக விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணி தொடங்கியுள்ளது. 

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15ம் தேதியில் இருந்து செயல்படுத்தப்பட உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். 

இதற்காக தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 63 லட்சம் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் முகாம்களில் விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் உண்மையாக உள்ளதா? என்பதை கண்டறியவும், விடுபட்ட விவரங்களை விண்ணப்பதாரர்களிடம் கேட்டு பெறவும் அரசு முடிவு செய்துள்ளது. 

இதற்காக வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக நியமிக்கப்பட்ட தன்னார்வலர்கள், மற்றும் கல்வித்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பதாரர்களிடம் விசாரித்து வருகின்றனர். வீடு சொந்த வீடா? வாடகை வீடா? என்ன வேலை பார்க்கிறார்கள். கார் இருக்கிறதா? மாத வருமானம் எவ்வளவு? மின்சார பயன்பாடு 2 மாதத்திற்கு எவ்வளவு பயன்படுத்தப்பட்டு உள்ளது என்பதையும் பார்க்கிறார்கள்.

மேலும், விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்களும், விசாரிக்கும்போது கிடைக்கும் விவரங்களும் சரிவர ஒத்துப்போகிறதா? என்பதையும் பார்க்கிறார்கள். விண்ணப்பத்தில் விடுபட்டுள்ள விவரங்களை கேட்டு அதை பதிவு செய்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com