மீன் பிரியர்களே உஷார்! தமிழக கடல் உணவுகள் குறித்து அதிர்ச்சி தகவல்!

இந்தக் கணக்கீடு அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் மதிப்பீட்டு முறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மீன் பிரியர்களே உஷார்! தமிழக கடல் உணவுகள் குறித்து அதிர்ச்சி தகவல்!
Published on: 
Updated on: 
3 min read

தினமும் உணவில் மீன் சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறப்படுகிறது. புரதச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துகள் மீன்களில் நிறைந்துள்ளதால், பலரும் மீனை விரும்பி சாப்பிடுகின்றனர். குறிப்பாக, தமிழகத்தில் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் அன்றாட உணவில் மீன் முக்கிய இடம் பிடித்துள்ளது. ஆனால், நாம் ஆரோக்கியம் என்று நினைத்து சாப்பிடும் மீன்களில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய கன உலோகங்கள் கலந்திருந்தால் என்ன செய்வது? தமிழகத்தின் நான்கு கடலோரப் பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்களில் ஈயம், துத்தநாகம், தாமிரம் மற்றும் இரும்பு போன்ற உலோகங்கள் அதிக அளவில் இருப்பதாக வெளியாகியுள்ள புதிய ஆய்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் முக்கிய மீன்பிடி மையங்களான சென்னை காசிமேடு, கடலூர் அருகே உள்ள உப்பனாறு, நாகப்பட்டினம் மாவட்டத்தின் வேளாங்கண்ணி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தின் மல்லிப்பட்டினம் ஆகிய நான்கு பகுதிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வணிக ரீதியாக அதிகம் விற்பனையாகும் கடல் மீன்களில் கன உலோகங்களின் அளவு எவ்வாறு உள்ளது என்பதை ஆய்வாளர்கள் ஆராய்ந்துள்ளனர். இதில் நான்கு இடங்களிலும் ஈயம், துத்தநாகம், தாமிரம் மற்றும் இரும்பு ஆகிய உலோகங்களின் செறிவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையின் காசிமேடு பகுதியில் பிடிக்கப்படும் மீன்களில் ஈயம் மற்றும் துத்தநாகத்தின் அளவு மற்ற இடங்களைக் காட்டிலும் அதிகமாகப் பதிவாகியுள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கடல் உயிரியல் மேம்பட்ட ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் 20 மீன் மாதிரிகளும், நான்கு கடலோரப் பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட நான்கு கடலடி மண் மாதிரிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்திய கானாங்கெளுத்தி, எண்ணெய் மத்தி, வெள்ளை வவ்வால், கிழங்கான், சீலா மற்றும் நெத்திலி உள்ளிட்ட மக்கள் பொதுவாக வாங்கி சாப்பிடும் மீன் வகைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் கடல் உணவுகளில் கன உலோகங்கள் எந்த அளவுக்குக் கலந்துள்ளன என்பதை ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆய்வில் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம், நான்கு இடங்களிலும் சுகாதார அபாயக் குறியீடு (Hazard Index - HI) 1-ஐ விட அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. நீண்ட காலமாக குறிப்பிட்ட உணவை உட்கொள்வதால் உடல்நலத்திற்கு ஏற்படக்கூடிய அபாயங்களை மதிப்பிடுவதற்காக இந்தக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது. இதில் மல்லிப்பட்டினம் 3.48 என்ற அதிகபட்ச மதிப்பைப் பெற்றுள்ளது. அடுத்ததாக உப்பனாறு 2.50, வேளாங்கண்ணி 2.21 மற்றும் காசிமேடு 1.91 என்ற மதிப்புகளைப் பெற்றுள்ளன. பொதுவாக இந்தக் குறியீடு 1-ஐத் தாண்டினால், நீண்ட கால வெளிப்பாட்டால் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இந்த மதிப்பு மட்டும் ஒருவருக்கு நோய் ஏற்பட்டுவிட்டது என்பதை உறுதிப்படுத்தாது.

இந்தக் கணக்கீடு அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் மதிப்பீட்டு முறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு நபர் தினமும் சராசரியாக 57.5 கிராம் மீன் சாப்பிடுவதாகவும், அவரது சராசரி உடல் எடை 55.9 கிலோவாக இருப்பதாகவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டில் இரும்பு மற்றும் ஈயம் ஆகிய உலோகங்கள் உடல்நல அபாயக் கணக்கீட்டில் அதிக பங்களிப்பைச் செய்துள்ளன. குறிப்பாக, ஈயம் மனித உடலுக்குள் செல்லக்கூடாத ஆபத்தான உலோகமாகக் கருதப்படுகிறது.

இந்த உலோகங்கள் மீன்களில் கலப்பதற்கு என்ன காரணம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கடலோரப் பகுதிகளில் செயல்படும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், துறைமுக நடவடிக்கைகள், படகுகளைப் பழுதுபார்க்கும் இடங்கள் மற்றும் நகர்ப்புறக் கழிவுகள் போன்றவை முக்கியக் காரணங்களாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். காசிமேடு பகுதியில் துத்தநாகத்தின் அளவு அதிகமாக இருப்பதற்கு படகுகளில் பயன்படுத்தப்படும் வண்ணப்பூச்சுகள், கடல் நீரில் படகுகளின் அடிப்பகுதியில் உயிரினங்கள் ஒட்டாமல் தடுக்கும் ரசாயனப் பூச்சுகள் மற்றும் துறைமுகப் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

உப்பனாறு பகுதியில் எடுக்கப்பட்ட மண் மாதிரிகளில் ஈயத்தின் அளவு அதிகமாக இருந்துள்ளது. இதற்கு சிப்காட் தொழிற்சாலைகள், கப்பல் கட்டும் தளங்கள் மற்றும் நகர்ப்புறக் கழிவுகள் காரணமாக இருக்கலாம் என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. மல்லிப்பட்டினம் பகுதியில் மீன்களில் இரும்பு மற்றும் தாமிரத்தின் அளவு அதிகமாக இருந்துள்ளது. இதற்கு தொழிற்சாலைக் கழிவுகள், படகு பழுதுபார்க்கும் இடங்கள், கழிவுநீர் மற்றும் மக்கும் கழிவுகள் காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கடலின் அடிப்பகுதியில் வாழும் மீன்களில் மற்ற மீன்களைக் காட்டிலும் கன உலோகங்கள் அதிகமாகச் சேர்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. கடலடிப் படிவுகளுடன் நேரடியாகத் தொடர்பில் இருப்பதும், அடிப்பகுதியில் வாழும் சிறிய உயிரினங்களை உணவாக உட்கொள்வதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். கடலடியில் படியும் மண் மற்றும் கழிவுகள் கன உலோகங்களைச் சேமித்து வைக்கும் இடமாகவும், அவை மீண்டும் கடல் உயிரினங்களுக்குச் செல்லும் வழியாகவும் செயல்படுகின்றன என்று ஆய்வின் தொடர்புடைய ஆசிரியர் யுவராஜ் தினகர்குமார் தெரிவித்துள்ளார்.

ஈயம் உடலுக்குள் நீண்ட காலமாகச் சேர்வது குறித்து மருத்துவ நிபுணர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஈயம் குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடும். பெரியவர்களுக்கு கடுமையான வயிற்று வலி உள்ளிட்ட பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம். மேலும், ஈயம் கலந்த உணவுகளை நீண்ட காலம் உட்கொள்வது உடலில் பல்வேறு பாதிப்புகளை உருவாக்கக்கூடும். அதே நேரத்தில், துத்தநாகம், தாமிரம் மற்றும் இரும்பு போன்ற உலோகங்கள் உடலுக்கு மிகக் குறைந்த அளவில் அவசியமானவை. ஆனால், அவை அளவுக்கு அதிகமாக உடலில் சேரும்போது உள்ளுறுப்புகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று மருத்துவர்கள் விளக்குகின்றனர்.

இந்த ஆய்வில் ஈயம் தொடர்பான புற்றுநோய் அபாயம் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. ஈயம் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய காரணியாக இருக்கலாம் என சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பு வகைப்படுத்தியுள்ளதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஈயம் கலந்த மீன்களை நீண்ட காலமாக உட்கொள்வது சிறுநீரகம், கல்லீரல் மற்றும் செரிமான மண்டலம் தொடர்பான புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வின் முதன்மை ஆசிரியர் நவீன்குமார் மகிதா குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இந்த ஆய்வு குறிப்பிட்ட மீன்களைச் சாப்பிடுவதால் ஏற்படும் புற்றுநோய் அபாயத்தை நேரடியாகக் கணக்கிடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிகளின்படி, மீன்களில் ஈயத்தின் அனுமதிக்கப்பட்ட உச்சவரம்பு ஒரு கிலோவுக்கு 0.3 மில்லி கிராம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆய்வில் கிடைத்த முடிவுகள் லிட்டருக்கு மில்லி கிராம் என்ற அளவில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், அவற்றை நேரடியாக அந்த உச்சவரம்புடன் ஒப்பிட முடியாது. எனவே, இந்த ஆய்வு முடிவுகளை வைத்து குறிப்பிட்ட இடங்களில் விற்கப்படும் அனைத்து மீன்களும் சாப்பிடுவதற்கு ஆபத்தானவை என்று முடிவு செய்ய முடியாது.

தமிழகத்தின் முக்கிய மீன்பிடி மையங்களில் கடல் மாசுபாடு குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை இந்த ஆய்வு உணர்த்தியுள்ளது. கடலில் கலக்கும் தொழிற்சாலைக் கழிவுகளைக் கட்டுப்படுத்துதல், துறைமுகப் பகுதிகளில் முறையான கழிவு மேலாண்மையைப் பின்பற்றுதல், மீன்களில் உள்ள கன உலோகங்களின் அளவைத் தொடர்ந்து பரிசோதித்தல் போன்ற நடவடிக்கைகள் அவசியம் என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக, கடல் வளங்களையும் பொதுமக்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே இந்த ஆய்வின் முக்கிய வலியுறுத்தலாக உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.