ஆயுத பூஜை: 3 பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்து இயக்கப்படும்…

ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள், 3 பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆயுத பூஜை: 3 பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்து இயக்கப்படும்…
Published on
Updated on
1 min read

ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள், 3 பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளில், அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. அந்தவகையில், அக்டோபர் 31ஆம் தேதி வரையில் பல்வேறு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆயுத பூஜை பண்டிகை கொண்டாட்டத்திற்காக, சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள், இதனால் ஏற்படும் பெரும் கூட்ட நெரிசல் காரணமாக கொரோனா பரவும் அபாயம் உள்ளது. எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்படி, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளின் போது பேருந்துகள் இயக்கப்படுவதைப் போல, வருகிற 12 மற்றும் 13 ஆகிய இரு நாட்களிலும், தாம்பரம், பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு ஆகிய 3 பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார்.

அதன்படி, திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை, போளூர், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி செல்லும் பேருந்துகள்...திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார், கடலூர் மற்றும் புதுச்சேரி செல்லும் பேருந்துகள் ஆகியவை தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன. வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஒசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன. மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோவை மற்றும் பெங்களூரு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன. மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம் மற்றும் பூந்தமல்லிக்கு மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும், பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும், போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கேட்டுக் கொண்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com