தேசிய இனங்களின் மொழிகளை சிறுமைப்படுத்துவதா? - வைகோ கண்டனம்

தேசிய இனங்களின் மொழிகளை சிறுமைப்படுத்துவதா? - வைகோ கண்டனம்
Published on
Updated on
1 min read

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு என இந்து ராஷ்டிர செயல் திட்டத்தை பா.ஜ.க. அரசு முன்னெடுத்துச் செல்வது இந்திய ஒருமைப்பாட்டிற்கு உலை வைக்கும் செயல் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

பாஜக அரசின் இந்து ராஷ்டிர செயல் திட்டம் இந்திய ஒருமைப்பாட்டிற்கு உலை வைக்கும் செயல் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், டெல்லியில் நடந்த இந்தி ஆலோசனைக்குழு கூட்டத்தில், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்று பேசும் போது,  “நமது தேசிய மொழியின் முதன்மையைப் புரிந்துகொள்வது முக்கியம். ஏனெனில் இது நமது உணர்வுகளை வெளிப்படுத்தவும், நமது ஒற்றுமைக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் ஒரு பாலத்தையும் வழங்குவதாக குறிப்பிட்டார். 

தொடர்ந்து பேசியவர், மாநில மொழிகளை நாம் பேசுவதற்கு பயன்படுத்தி கொள்ளலாம். இந்தியை தேசிய மொழியாக கருதி, நாம் அனைவரும் நமது தேசியத் தன்மையை வடிவமைக்க உதவும் ஒரு மொழியாக இந்தியைப் பயன்படுத்துவோம் என்று கூறினார். ஒன்றிய சுகாதாரத்துறையில் உள்ள அதிகாரப்பூர்வ பணிகளில் இந்தி பயன்பாட்டை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மன்சுக் மாண்டவியா தெரிவித்ததை சுட்டிக்காட்டியவர், அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளும் தேசிய மொழிகள் தான். அவற்றை மக்கள் பேசுவதற்கான மொழிகள் மட்டுமே என்று மத்திய அமைச்சர் சிறுமைப்  படுத்துவது கண்டனத்துக்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மத்திய பாஜக அரசு இந்தி மொழியை மட்டும் தேசிய மொழி என்று அங்கீகரிப்பதும், இந்தி மொழியைத் திணிப்பதும் நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிரானதாகும். இந்தியாவின் கலாச்சார ஒருமைப்பாடு என்பது பல்வேறு தேசிய இனங்களின் மொழி உரிமை, இன உரிமை, பண்பாட்டு உரிமையை ஏற்று மதித்து பாதுகாப்பதில் தான் அடங்கியிருக்கிறது என்பதை பாஜக அரசு உணர வேண்டும். அதனை விடுத்து ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு என்று இந்து ராஷ்ட்ர செயல் திட்டத்தை பாஜக அரசு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது ஒருமைப்பாட்டுக்கு உலை வைக்கும் வேலையாகும் என்று வைகோ தனது அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com