
பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அலெக்சிஸ் சுதாகரை மூன்று வழக்குகளில் கைது செய்து, சிறையிலடைத்த உத்தரவுகளை செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துப்பாக்கி சப்ளை செய்ததாக, பாஜக மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அலெக்ஸிஸ் சுதாகரை மாமல்லபுரம் போலீசார், கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்தனர்.
அதேபோல, பணமோசடி, ஆள்கடத்தல் தொடர்பாக கோவை மாவட்டம், குனியமுத்தூர் மற்றும் துடியலூர் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலும் கைது செய்யப்பட்டார். அதேபோல குண்டர் சட்டத்திலும் அவர் சிறையிலடைக்கப்பட்டார்.
குண்டர் சட்டத்தில் அவரை சிறையிலடைத்து பிறப்பித்த உத்தரவை, அறிவுரை கழகம் ரத்து செய்தது. இந்த மூன்று வழக்குகளிலும் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், மூன்று வழக்குகளிலும் தன்னை கைது செய்ததையும், சிறையிலடைத்து பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்யக் கோரி அலெக்சிஸ் சுதாகர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்று மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மூன்று வழக்குகளிலும் கைதுக்கான காரணங்களை மனுதாரருக்கு தெரிவிக்கவில்லை. குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமானது எனக் கூறி, மூன்று வழக்குகளிலும் அலெக்சிஸ் சுதாகரை கைது செய்து, சிறையிலடைத்த உத்தரவுகள் செல்லாது என உத்தரவிட்டார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.