
தமிழகத்திற்கான மாநிலக் கல்விக் கொள்கையை முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டதைத் தொடர்ந்து தேர்தல் காலம் நெருங்கிய பீதியில் அவசர கதியில் தேசியக் கல்விக் கொள்கையைப் பார்த்து அரைகுறையாகப் பிரதி எடுத்துள்ளது திமுக அரசு எனவும், காப்பியடித்தும் ஃபெயில் ஆன திராவிட மாடல் என்றும் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் “மத்திய அரசின் முன்னெடுப்புகளை மேடைகளில் எதிர்ப்பதும், திரை மறைவில் அதற்கு ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடுவதையுமே முழுநேரத் தொழிலாகப் புரிந்து வரும் திமுக அரசு, அதே வரிசையில் தற்போது மாநிலக் கல்விக் கொள்கையை வெளியிட்டு இருக்கிறது.
மத்திய அரசு கொண்டுவந்த தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ வெட்டி வீராப்புக்காக எதிர்த்து விட்டு, பின் மாணவர் நலனில் அக்கறை கொண்டது போல மூன்றாண்டுகளாக 'மாநிலக் கல்விக் கொள்கையை வரைவு செய்கிறேன்' என மக்கள் வரிப்பணத்தை வீணடித்துவிட்டு மாணவர்களைத் திமுக அரசு ஏமாற்றி வந்தது அனைவரும் அறிந்ததே. மும்மொழிக் கல்விக் கொள்கைக்கு மக்கள் அளித்து வரும் ஆதரவைப் பார்த்து பயந்து, தற்போது அவசரகதியில் தேசிய கல்விக் கொள்கையைப் பிரதி எடுத்து மாநிலக் கல்விக் கொள்கையைத் திமுக அரசு வெளியிட்டிருக்கிறது என்பது தான் உண்மை.
'ஈயடித்தான் காப்பி' அடித்தும் தேசிய கல்விக் கொள்கையின் பல முக்கிய அம்சங்களை மாநிலக் கல்விக் கொள்கையில் இடம்பெறச் செய்யாமல் இருப்பது, மாணவர் முன்னேற்றத்தை விட மத்திய அரசின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி தான் திமுக அரசுக்கு முக்கியம் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
"பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலம்" என்னும் பிம்பத்திற்குப் பின், நான்காண்டுகளாக அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அரசுப்பள்ளிகள் சீரழிந்து வருவதைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, தற்போது தேர்தல் நெருங்கும் சமயத்தில் மட்டும் கல்விக் கொள்கையைப் பற்றி தங்களுக்கு எப்படி ஞாபகம் வந்தது மாண்புமிகு முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே?
மாணவர்களின் வருங்காலத்தைப் பற்றி சிந்திக்காமல் தேசிய கல்விக் கொள்கையைப் புறந்தள்ளி, வாக்குவங்கி அரசியலுக்காக தினந்தோறும் விளம்பரத்தைப் பற்றி மட்டுமே திட்டமிடும் இந்த திராவிட மாடல் அரசுக்கு தக்க பாடத்தை வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் கற்றுக் கொடுப்பர்! என குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.