கடையநல்லூர் நகராட்சி கூட்டரங்கில் அகற்றப்பட்ட பிரதமர் மோடியின் புகைப்படத்தை மீண்டும் வைக்க கோரி தென்காசியில் மாவட்ட ஆட்சியரிடம் கைக்குழந்தையுடன் மனு அளித்த பா.ஜ.க. கவுன்சிலர்கள்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நகராட்சி கவுன்சிலர்கள் ஒருங்கிணைந்து தீர்மானம் நிறைவேற்றி பாரத பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைக்கப்பட்டது. இந்நிலையில், கூட்ட அரங்கில் இருந்த பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை நகராட்சி நிர்வாகத்தினர் அப்புறப்படுத்தினர். இதற்கு கண்டனம் தெரிவித்து கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு பாஜக.வினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட 3 பாஜக கவுன்சிலர்கள் கைக்குழந்தையுடன் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று வருகை தந்து, தீர்மானங்கள் நிறைவேற்றி முறையான அரசாணை வெளியிட்ட பின் வைக்கப்பட்ட பிரதமர் நரேந்திரமோடி புகைப்படத்தை அப்புறப்படுத்தி உள்ளதாகவும், ஆகவே பிரதமர் நரேந்திர மோடி புகைப்படத்தை மீண்டும் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.ரவிச்சந்திரனை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.
இந்த கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் இது தொடர்பாக உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை மீண்டும் வைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.