பாஜக., நடத்தி வரும் மும்மொழி கொள்கை ஆதரவு கையெழுத்தி இயக்கத்தில் கையெழுத்திட்டதற்காக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ விஜயக்குமாரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
முன்னாள் எம்எல்ஏ நீக்கம் :
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ விஜயக்குமார். இவர் தற்போது எல்லாபுரம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளராக செயல்பட்டு வருகிறார். இவர் பெரியபாளையம் அருகே மஞ்சங்கரணை கிராமத்தில் தன்னுடைய காரில் வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு நடந்து கொண்டிருந்த பாஜக.,வின் மும்மொழி கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விஜயக்குமார் கையெழுத்து போட்டுள்ளார். இதனை காரணமாக காட்டி, கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக நடந்து கொண்டதாக விஜயக்குமார் அதிமுக.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மத்திய பாஜக அரசின் மும்மொழி கொள்கைக்கு தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் அதிமுக., கூட திமுக., பக்கம் தான் நிற்கிறது. பாஜக-அதிமுக கூட்டணி அமையும் என எதிர்பார்த்து வரும் நிலையில், மும்மொழி கொள்கை நிலைப்பாட்டால், கூட்டணி உருவாகாமல் போவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ள நிலை உருவாகி உள்ளது. பாஜக உடனான கூட்டணி ஒரு பக்கம் இருந்தாலும் அதிமுக.,வில் கடந்த சில மாதங்களாகவே பல அதிரடி விஷயங்கள் நடந்து கொண்டிருப்பதை பலரும் கவனித்திருக்க மாட்டார்கள்.
அதிமுக.,வில் நடக்கும் அதிரடிகள் :
அதிமுக.,விற்குள் குழப்பம் உள்ளதை சமீபத்தில் நடந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விவகாரம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது. இப்போது கையெழுத்து போட்டதற்காக முன்னாள் அமைச்சர் விஜயக்குமார் நீக்கப்பட்டுள்ளது அதிமுக.,விற்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தை உறுதி செய்துள்ளது. என்ன நடந்தது என விஜயக்குமாரிடம் கேட்டதற்கு, தான் கிராமத்து வீட்டில் இருந்து வெளியே வந்த போது உள்ளூர் பாஜக நிர்வாகிகள் தன்னுடைய காரை மறித்து, வலுக்கட்டாயமாக கையெழுத்து போடும் படி வற்புறுத்தியதால் வேறு வழி இல்லாமல் கையெழுத்து போட்டேன். அப்போதும் எங்களின் பொதுச் செயலாளரின் இருமொழி கொள்கை தான் என்னுடைய கொள்கையும். இது குறித்து விளக்கம் அளித்து நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வேன் என விளக்கமும் அளித்து விட்டார்.
இருந்தாலும் அவரிடம் விளக்கம் ஏதும் கேட்காமலேயே அதிமுக தலைமை அவரை கட்சியில் இருந்து நீக்கி உள்ளது. சமீப காலமாகவே பலரும் கட்சியில் இருந்து நீக்கப்படுவது அதிமுக.,வில் தொடர்கதையாகி வருகிறது. விஜயக்குமார் முன்னாள் எம்எல்ஏ., என்பதால் பெரிய அளவில் வெளியில் தெரிவதாகவும், ஆனால் வெளியில் தெரியாமல் பல நிர்வாகிகள் நீக்கப்பட்டும், மாற்றப்பட்டும் வருவதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக.,விற்குள் ஏன் இத்தனை மாற்றங்கள்? என்ன தான் நடக்கிறது? எதற்காக இந்த நீக்கங்கள்?
பின்னணி காரணங்கள் :
அதிமுக.,விற்குள் நடக்கும் அதிரடிகளுக்கு பாஜக மறைமுக காரணமாக இருக்குமோ என்ற சந்தேகமும் தமிழக அரசியல் ட்டாரத்தில் நிலவி வருகிறது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ளது. அதற்குள் தமிழகத்தில் ஏதாவது ஒன்றை செய்து தங்களை நிலைநிறுத்திக் கொண்டு, தமிழக மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது. தமிழகத்தில் திராவிட கட்சிகளை தாண்டி தனித்து போட்டியிட்டு, பெரும்பான்மை இடங்களை கைப்பற்றுவதற்கும், நிலையான இடத்தை பாஜக பிடிப்பதற்கும் வாய்ப்பே இல்லை. தமிழகத்தில் பாஜக காலூன்ற வேண்டும் என்றால் அதற்கு கண்டிப்பாக மாநில கட்சி ஒன்றின் ஆதரவு தேவை.
கூட்டணி முயற்சியா? :
ஏற்கனவே தமாக, பாமக போன்ற கட்சிகள் பாஜக கூட்டணியில் இருந்தாலும் அவர்கள் அந்த அளவிற்கு தமிழகம் முழுவதும் செல்வாக்கும், ஓட்டு வங்கியும் கொண்ட கட்சிகள் கிடையாது. புதிதாக கட்சி துவங்கி, மக்கள் கவனத்தை ஈர்த்து வரும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், பாஜக.,வை கொள்கை எதிரி என வெளிப்படையாகவே சொல்லி விட்டார். அதனால் அவருடன் கூட்டணி வைக்கவும் வாய்ப்பில்லை. விசிக, நாம் தமிழர் போன்ற கட்சிகளும் பாஜக., பக்கம் போவதற்கு வாய்ப்பை கிடையாது. இன்றைய தேதியில் பாஜக., கூட்டணியில் இணைய வாய்ப்புள்ள ஒரே கட்சி அதிமுக மட்டும் தான். அது மட்டுமல்ல, அதிமுக.,வுடன் கூட்டணி வைத்தால் தான் பாஜக.,விற்கு அது பலமாக இருக்கும்.
பிளான் "பி" இது தானா?
அதிமுக.,வை கூட்டணிக்கு வரவழைப்பதற்காக பாஜக., மறைமுகமாக நடத்தும் ஆட்டம் தான், அதிமுக.,விற்குள் ஏற்படும் குழப்பங்களுக்கு காரணமா என்ற சந்தேகம் கூட எழுகிறது. கூட்டணிக்கு அடிபணியாத கட்சிகளை உடைக்கும் தந்திரத்தை ஏற்கனவே பாஜக வடக்கில் பல மாநிலங்களில் கையாண்டுள்ளது என்பது அனைவரும் அறிந்தது தான். அதே ஃபார்முலாவை தமிழகத்திலும் பாஜக, அதிமுக விஷயத்தில் கையாள்கிறதோ என எண்ண தோன்றுகிறது. இதற்கு முன் விசிக.,வை வைத்து திமுக கூட்டணியை உடைக்க சில முயற்சிகள் நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. திமுக கூட்டணியை உடைத்து அதிலிருந்து வெளியேறும் சிறிய கட்சிகளை ஒன்றாக வளைத்து கூட்டணியை உருவாக்குவது தான் பாஜக.,வின் பிளான் "ஏ" ஆக இருந்ததாகவும், அது முடியாமல் போனதால் பிளான் "பி" ஆக அதிமுக.,வை வழிக்கு கொண்ட வரும் முயற்சியில் பாஜக இறங்கி உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் அரசல் புரசலாக ஒரு தகவல் பரவிக் கொண்டிருக்கிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்