வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் பாஜக நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து போராட்டம் நடத்திய பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை திருவல்லிக்கேணியில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் பாஜக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை கண்டித்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், சென்னை பாரிமுனையில் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக மாநிலதுணைத் தலைவர் கரு நாகராஜன், மாநில செயலாளர்கள் வினோஜ் பி.செல்வம், சதீஷ்குமார் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
துணை ஆணையர் ஸ்ரேயா குப்தா தலைமையிலான 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 200க்கும் மேற்பட்டோரை கைது செய்து ராயபுரத்தில் உள்ள மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்
அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக துணை தலைவர் கரு நாகராஜன்,
"திருவல்லிக்கேணி வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் அனைத்து கட்சி நிர்வாகிகள் உட்பட பாஜகவினரும் வாக்காளர் சரிபார்ப்பு முகாமில் வாக்காளர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தனர். வன்முறை கலாச்சாரத்திற்கு பேர் போன திமுகவினர், அராஜகத்தில் ஈடுபட்டு பாஜக மண்டல துணைத் தலைவர் சுமனை தாக்கியுள்ளனர்.
அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக FIR பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தாக்குதல் நடத்தியவர்களை இதுவரை கைது செய்யவில்லை. இது தொடர்பான ஆதாரத்துடன் வீடியோ பதிவு நீதிமன்றத்தில் கொடுக்கப்படும். குற்றவாளிகளை கைது செய்ய வேண்டிய காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை கைது செய்வது கண்டிக்கத்தக்கது" என தெரிவித்தார்.