பாஜகவின் வெறுப்பரசியல் இந்த மண்ணில் ஒருபோதும் எடுபடாது - ஆர்.எஸ்.பாரதி

பாஜகவின் வெறுப்பரசியல் இந்த மண்ணில் ஒருபோதும் எடுபடாது - ஆர்.எஸ்.பாரதி
Published on
Updated on
3 min read

திராவிட முன்னேற்ற  கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம்:

நாள்தோறும் வதந்திகளை பரப்பும் பாஜக

அமைதிப் பூங்கா எனப் பெயர் பெற்ற தமிழ்நாடு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில் தொழில் முதலீடுகளிலும் முன்னணி மாநிலமாகத் திகழ்வதை, வெறுப்பரசியல் நடத்தும் பா.ஜ.க. நிர்வாகிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நாள்தோறும் வதந்திகளைப் பரப்பி, தமிழ்நாட்டை வன்முறைக்காடாக மாற்றலாம் என மனப்பால் குடித்து வருகிறார்கள்.

இந்தியாவை வழிநடத்தும் தன்மை முதலமைச்சருக்கே உண்டு 

கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டத்தில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்று, “இந்தியாவுக்கு நம் கழகத்தலைவர் அவர்கள்தான் வழிகாட்ட வேண்டும்” என்றும், “இந்தியாவை வழிநடத்தும் தலைமைத் தகுதி நம் கழகத் தலைவருக்கு இருக்கிறது” என்றும் உளமாரப் பாராட்டியதால் பா.ஜ.க.வினருக்கு அங்கமெல்லாம் எரியத் தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டின் முதலமைச்சருடைய பெருமைமிகு சிறந்த நிர்வாகத்திற்குக் களங்கம் கற்பிக்க வேண்டும் என்பதற்காகவே, தமிழ்நாட்டில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக, திட்டமிட்டுத் திரிக்கப்பட்ட வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பினர். அதன் மூலம் பதற்றத்தை உருவாக்கலாம் என்பதே அவர்களின் வஞ்சகத் திட்டம்.

பா.ஜ.க. பரப்பியதெல்லாம் வதந்திதான் என்பது தமிழ்நாட்டில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்களிடமும் அம்பலமாகிவிட்டதால் அலறல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை. அதில் வழக்கம் போல திசைதிருப்பும் வேலையைக் காட்டியிருக்கிறார், பொய்யையே முதலீடாகக் கொண்டு அரசியல் நடத்தி வரும் அரைக்கால் வேக்காடு அண்ணாமலை.

திராவிட முன்னேற்றக் கழகம் இந்திக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் செய்வதன் விளைவால்தான் வதந்திகூட உண்மைபோன்ற அச்சத்தை உருவாக்கிவிட்டது என்று மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட அண்ணாமலை நினைக்கிறார். தி.மு.க. எந்த மொழிக்கும் எதிரான இயக்கமல்ல. எங்கள் அன்னைத் தமிழ்நாட்டவர் மீது ஆதிக்க இந்தியைத் திணிக்காதே என்று எந்நாளும் உரிமைக்குரல் கொடுக்கின்ற இயக்கம்தான் தி.மு.க. அதற்காகத் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டு அன்னைத் தமிழுக்கு உயிர்க்கொடை ஈந்த தியாக மறவர்களைக் கொண்ட இயக்கம்.

இந்தி பேசுவோர் மீது ஒருபோதும் வெறுப்பில்லை 

இந்தித் திணிப்புக்கு எதிரான தி.மு.க.வின் உறுதியான நிலைப்பாடு என்பது இந்தி பேசும் மக்கள் மீதான வெறுப்பாக ஒருபோதும் இருந்ததே இல்லை.தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இந்திமொழிக்காரர்களிடம் அரைக்கால் வேக்காட்டு அண்ணாமலைகள் இதுபற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும்.

ஒரு மொழி பேசுபவருக்கும் எதிரான பிரச்சாரம் அல்ல

இந்தி மட்டும்தான் தேசியமொழி, ஆட்சிமொழி, அதைப் படித்தால் மட்டும்தான் வேலை என்கிற பா.ஜ.க.வின் மொழித்திணிப்பை அம்பலப்படுத்தி, இந்தியையே தாய்மொழியாகக் கொண்டவர்கள்கூட நமது தமிழ்நாட்டுக்குத்தான் வேலை தேடி வருகிறார்கள் என்பதுதான் தி.மு.க.வினரின் பரப்புரையே தவிர, எந்த ஒரு மொழி பேசுபவருக்கும் எதிரான பிரச்சாரம் அல்ல.

அதே நேரத்தில், பா.ஜ.க.வினர்தான் மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்தி வெறுப்பரசியல் நடத்தி வருகிறார்கள் என்பதை நாடே அறியும். சாதிப்பிரிவினை அரசியலால் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் மீதான வன்முறைத் தாக்குதல்கள்,  சிறுபான்மை மக்களைப் பார்த்து ‘பாகிஸ்தானுக்குப் போ” என பா.ஜ.க. நிர்வாகிகள் வெறுப்புணர்வுப் பிரச்சாரம், அவர்கள் மீது கொடூரத் தாக்குதல்கள் எனத் தொடர்ச்சியான வன்முறை - வெறுப்பரசியலை நடத்தி, இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிராக இருப்பவர்கள் தேசபக்தி வேடம் போடும் அண்ணாமலையின் கட்சியினர்தான்.

வெறுப்பையும் பகையையும் கொள்கையாகக் கொண்ட பா.ஜ.க.வின் மாநிலத் தலைமைப் பொறுப்பு வகிக்கும் அண்ணாமலை, “வடமாநிலத்தவர் மீதான வெறுப்பு பிரச்சாரங்களுக்கு முடிவு கட்டுவாரா முதல்வர்?” என்று கேட்பது வெட்கக்கேடு. கண்ணாடி முன்னாடி நின்று காரித்துப்பும் செயலுக்கு ஈடானது.

வதந்தியை உண்மை போல பதிவு செய்து, பதற்றத்தைப் பரப்பி வருதல்

பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்துள்ள தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலம் போல இங்கே உழைத்து வாழ்வதற்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என தாயுள்ளத்துடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உறுதி அளித்திருக்கிறார்கள். வதந்தியைப் பரப்புவோர் எத்தகைய கொம்பனாக இருந்தாலும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற உத்தரவாதத்தைத் தந்திருப்பதுடன், தமிழ்நாட்டில் பீகார் மாநிலத் தொழிலாளர்கள் 12 பேர் கொல்லப்பட்டதாக அரசியல் உள்நோக்கத்துடன் பொய்யாக வதந்தி பரப்பிய உத்தரபிரதேச மாநில பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உமாராவ் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சட்டரீதியான மேல் நடவடிக்கைகள் எடுககப்பட்டு வருகின்றன.

பீகார் மாநில பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் வதந்தியை உண்மை போல பதிவு செய்து, பதற்றத்தைப் பரப்பி வருவது குறித்தும் சட்டத்தின் பார்வை பதிந்துள்ளது. வகுப்புவாதம், மதவெறி, மொழிவெறி, கலவரம், பிணவாடை இவற்றிலேயே அரசியல் செய்யும் பா.ஜ.க.வினர் இந்த வதந்தியைக் காட்டுத் தீயைப் போல பரப்பி, தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்கச் செய்யலாம் என நினைக்கிறார்கள்.

 அண்ணாமலை அரைக்கால் வேக்காட்டுத்தனமான அரசியல்

ஆனால், பீகார் மாநில அரசின் சார்பில் வந்த குழுவினர், தமிழ்நாட்டில் எவ்வித அச்சமான சூழலும் இல்லை என்பதையும், வடமாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்து, உண்மை நிலையைத் தெளிவான அறிக்கையாக அளித்துள்ளனர். உண்மைக்கு மாறாக, வதந்தியைத் தொடர்ந்து பரப்பும் உத்தரபிரதேச, பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகளை நோக்கி கேள்வி கேட்க வேண்டிய அண்ணாமலை, தமிழ்நாட்டின் முதலமைச்சர் நோக்கி அறிக்கை அம்பு விடுவது என்பது அரைக்கால் வேக்காட்டுத்தனமான அரசியல் உள்நோக்கமின்றி வேறில்லை.

பாஜக இரட்டை வேடம் 

வடமாநிலத் தொழிலாளர்கள் நலன் காப்பதில் தமிழ்நாடு அரசுக்குத் துணை நிற்போம் எனத் தெரிவித்த அண்ணாமலை, அந்த அறிக்கையில் உள்ள மையின் ஈரம் காய்வதற்குள், வன்ம அறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பது அவரது இரட்டை வேடத்தைத்தான் தோலுரித்துக் காட்டியுள்ளது.

அண்ணாமலையைப் போன்றவர்கள் எத்தனை வேடம் போட்டு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள். உண்மையறிந்த வடமாநிலத் தொழிலாளர்களும் அவர்களின் சதியை உணரத் தொடங்கிவிட்டார்கள். இனியும் தொடர்ந்து வதந்தி பரப்பி வன்முறைச் சூழலை உருவாக்க நினைத்தால் சட்டரீதியான நடவடிக்கையைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com