
பல்லடம் அருகே பொங்கலூர் அடுத்த அலகுமலை பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது, தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்காக, 30 பேருக்கு 14 ஏக்கர் பஞ்சமி நிலம் தானமாக வழங்கப்பட்டது. அங்கிருந்தவர்கள் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கு சென்ற நிலையில், பலகோடி மதிப்பிலான அந்த நிலத்தை மற்றொரு தரப்பினர் முள்வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த நிலத்திற்கு அருகே வசித்து வரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள், அந்த நிலத்தை தங்களுக்கு பிரித்து வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் தனித்தனியாக மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், தாழ்த்தப்பட்ட மக்கள் சிலர் அந்த நிலத்தில் குடிசை அமைக்க முயன்றதால் பெரும் பரபரப்பு நிலவியது.அப்போது அங்கு வந்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர் குடிசைகளை அகற்றியதால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், 22 பேரை போலீசார் கைது செய்தனர்.