சென்னை ஆளுநர் மாளிகை, எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ...!

சென்னை ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலகம், எழும்பூர் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு இருப்பதாக கடிதம் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆளுநர் மாளிகை, எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ...!
Published on
Updated on
1 min read

சென்னையை அடுத்த மதுராந்தகம் ரயில் நிலைய மேலாளருக்கு மேல்மருவத்தூரைச் சேர்ந்த கங்காதரன் என்ற நபர் மூலம் கடிதம் ஒன்று வந்தது. அந்தக் கடிதத்தில் சென்னையிலுள்ள ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலகம், எழும்பூர் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு வைக்க சில கேரள மாவோயிஸ்டு அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாகவும், அங்கெல்லாம் வெடிகுண்டு வெடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து மதுராந்தகம் ரயில் நிலைய மேலாளர் அளித்த தகவலின் அடிப்படையில் எழும்பூர் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் மோப்ப நாய் டைசன் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் எழும்பூர் ரயில் நிலைய நடைமேடைகளில் உள்ள பயணிகளின் உடமைகள், ரயில் நிலையத்திற்கு வந்த ரயில்கள் ஆகிய இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் வெடிகுண்டு ஏதும் இல்லை என்பது உறுதியான நிலையில், மிரட்டல் வந்தது வதந்தி எனத் தெரியவந்தது. இதனையடுத்து மதுராந்தகம் ரயில்வே போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலி மிரட்டல் கடிதத்தை அனுப்பிய கங்காதரன் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் கங்காதரன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும், ஏற்கனவே இதுபோன்ற போலியான மிரட்டல்கள் விடுத்த காரணத்திற்காக கைதாகி சிறைக்குச் சென்றவர் என்பதும் தெரியவந்துள்ளதாக மதுராந்தகம் ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com