பதிவு சான்றிதழ் வழங்க லஞ்சம்... உதவி ஆய்வாளருக்கு சிறை ...!!

பதிவு சான்றிதழ் வழங்க லஞ்சம்... உதவி ஆய்வாளருக்கு சிறை ...!!
Published on
Updated on
1 min read

கடைக்கு பதிவு சான்றிதழ் வழங்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் தொழிலாளர் உதவி ஆய்வாளருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வடபழனியில் உள்ள தனது கடைக்கு தொழிலாளர் துறை வாயிலாக சான்றிதழ் பெறுவதற்காக ஆரோகுமார் என்பவர் கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபரில் விண்ணப்பித்துள்ளார்.  அந்த சான்றிதழை வழங்க சைதாப்பேட்டையில் உள்ள தொழிலாளர் உதவி ஆய்வாளர் ரமேஷ் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டது குறித்து, சென்னை லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் அளித்தார்.

காவல்துறை அறிவுறுத்தலின்படி, லஞ்ச பணத்தை ஆரோகுமார் கொடுத்தபோது, உதவி ஆய்வாளர் ரமேசை ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.  இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.ஓம்பிரகாஷ் முன் நடந்தது. போலீசார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் உஷாராணி ஆஜரானார்.

இரு தரப்பு வாதங்களுக்கு பின் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட ரமேசுக்கு, 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com