கள்ளச்சாராய விற்பனையை தடுத்திட தீவிர நடவடிக்கை - சிபிஐ (எம்) வலியுறுத்தல்

கள்ளச்சாராய விற்பனையை தடுத்திட தீவிர நடவடிக்கை - சிபிஐ (எம்) வலியுறுத்தல்
Published on
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 6 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா ரூ. 10 லட்சம் அறிவித்துள்ளதும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ. தலா 50 ஆயிரமும், சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது ஆறுதலை தருகிறது.

 தமிழ்நாட்டில் பல்லாண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை தொடர்ந்து வருவது அவ்வப்போது வெளிப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்துதல் மற்றும் விற்பது தொடர்பான குற்றங்கள் 1.49 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 11,828 பெண்கள் உட்பட 1,39,697 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ 1,77,99,900 மதிப்புள்ள சாராய ஊறல் ரூ. 2,07,20,760 மதிப்புடைய கள்ளச்சாராயம் ரூ. 31,21,700 மதிப்புடைய எரிசாராயம் கைப்பற்றியதாக அரசு ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதிலிருந்து கள்ளச்சாராய விற்பனை சரளமாக நடந்து வருவதை அறிய முடிகிறது.

 தமிழ்நாட்டில் இயங்கி வரும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவின் நிர்வாகத் திறமையின்மையும், உள்ளூர் காவல்துறையினர் கள்ளச்சாராய வியாபாரிகளுடன் கொண்டுள்ள கூட்டு உறவின் காரணமாக கள்ளச்சாராய விற்பனை தொடர்வதும், உயிரிழப்புகள் ஏற்படுவதும் நடந்துள்ளது.

 எனவே, தமிழ்நாடு அரசு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவினை செயல்திறன் மிக்கதாக மாற்றுவதுடன், கள்ளச்சாராய பேர்வழிகளோடு உறவு கொண்டுள்ள காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்து மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனையை தடுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம் என                              மாநில செயலாளர் (கே.   பாலகிருஷ்ணன்) தெரிவித்துள்ளார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com