

அன்பில் மகேஷ் தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று காலை முதல் சுமார் 8 மணி நேரம் சோதனை நடத்தினர். இந்த சோதனையை தமிழக வெற்றிக் கழக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என திமுகவினர் விமர்சித்து வரும் சூழலில் இதுகுறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.
திமுகவைச் சேர்ந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக செயல்பட்டார்.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தர உயர்வு, DTCP அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி 100 கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்த குற்றச்சாட்டில் திமுக நிர்வாகி பிடி அரசகுமார் உள்ளிட்ட 3 பேர் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணை மற்றும் கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் சென்னை மற்றும் திருச்சியில் அன்பில் மகேஷ் தொடர்புடைய 4 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.
சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அன்பில் மகேஷ் இல்லம் மற்றும் தியாகராயா நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அலுவலகம் பூட்டு போடப்பட்டிருந்ததால் மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் கதவை உடைத்து சோதனையில் ஈடுபட்டனர்.
திருச்சி, தென்னூர் அண்ணா நகரில் உள்ள அவரது இல்லம், அன்பில் மகேஷின் உதவியாளரும் உறவினருமான வாளாடி கார்த்திக் என்பவருக்கு சொந்தமான 2 இடங்கள், உட்பட 6 இடங்களில் சோதனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
காலை 7:40 மணி அளவில் திருச்சி இல்லத்தில் சோதனை தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சுமார் 8 மணி நேரம் வரை சோதனை தொடர்ந்துள்ளது.
அன்பில் மகேஷ் வீட்டில் உள்ள கழிவறை உட்பட அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. வீட்டிற்கு வெளியில் இருந்த கார், உள்ளே எடுத்துச் செல்லப்பட்டு சோதிக்கப்பட்டது.
தியாகராயா நகரில் உள்ள அவரது அலுவலகத்தின் அருகில் இருந்த குப்பை தொட்டியிலும் ஏதேனும் ஆவணங்கள் இருக்கிறதா என அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சோதனை நடத்தப்படுவது தெரிந்து வீட்டின் முன் தொண்டர்கள் குவிந்தனர். முன்னாள் அமைச்சர் கே.என். நேரு அன்பில் மகேஷ் இல்லத்துக்கு வருகை தந்தார். காவலர்கள் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
செய்தியாளர்களை சந்தித்த கே.என். நேரு, தமிழக வெற்றிக் கழகம் அரசின் காழப்புணர்ச்சி தான் இந்த சோதனைக்கு காரணம் எனப் பேசினார்.
இதுகுறித்து அன்பில் மகேஷ் பேசும்போது, "நான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தொடர்பாக வைத்திருந்த ஆவணங்களையும், அனைத்து மாவட்டங்களுக்கும் ஆய்வுக்காகச் சென்றபோது வைத்திருந்த ஆவணங்களையும் போலீசார் எடுத்துச் சென்றுள்ளனர்." எனக் கூறினார்.
ஆனால் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அடுத்தகட்ட விசாரணைக்காக வருகின்ற 18ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த மே மாதம் தவெக தலைமையிலான அரசு அமைந்தது முதல், திமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனைகள் நடைபெறுவது தொடர்கிறது.
லஞ்ச ஒழிப்புத்துறையினர் முன்னாள் அமைச்சர்கள் எ.வ. வேலு , வி. செந்தில்பாலாஜி, கே.என். நேரு ஆகியோர் வீட்டில் சோதனை நடத்தியாதைத் தொடர்ந்து அன்பில் மகேஷ் இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு ரெய்டு நடைபெற்றுள்ளது.
இதுமட்டுமல்லாமல் முதலமைச்சர் விஜய்யை அவதூறாக பேசியதாக மார்க்கண்டேயன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரும் பெண்களை அவமதித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் தவெக அமைச்சரை அவதூறாக பேசியதாக சேகர் பாபு மற்றும் ஆ.ராசா மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்