'மதியம் 1.50 மணிக்கு வெடிக்கும்!' பீதியை கிளப்பிய மர்மக் குறிப்பு.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

தகவல் கிடைத்ததும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் உஷாரானார்கள். வழக்கமான விமானப் பாதுகாப்பு நடைமுறைகளின்படி தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விமானம் மதியம் சுமார் 1 மணியளவில் சென்னையில் தரையிறங்கியது.
flight cancelled
'மதியம் 1.50 மணிக்கு வெடிக்கும்!' பீதியை கிளப்பிய மர்மக் குறிப்பு.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!representational image
Published on: 
Updated on: 
2 min read

விமானத்தின் கழிப்பறையில் ஒட்டப்பட்டிருந்த ஒரு சிறிய tissue பேப்பர், நடுவானில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் எழுதப்பட்டிருந்த ‘Boom 1.50 pm’ என்ற வாசகத்தைப் பார்த்த விமானப் பணியாளர் உடனடியாக விமானிக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து விமானம் சென்னையில் முன்னுரிமை அடிப்படையில் தரையிறங்க அனுமதி கோரப்பட்டது. 192 பயணிகளுடன் வந்த விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதும், வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர சோதனைக்குப் பிறகு அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் நவம்பர் 13ஆம் தேதி நடைபெற்றுள்ளது. ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த இண்டிகோ விமானம் மதியம் சுமார் 12 மணியளவில் புறப்பட்டுள்ளது. விமானத்தில் மொத்தம் 192 பயணிகள் இருந்துள்ளனர். விமானம் வழக்கம்போல் பயணித்துக் கொண்டிருந்தபோது, அதன் கழிப்பறையில் பணியாற்றச் சென்ற விமானப் பணியாளர் ஒருவருக்கு சந்தேகத்திற்குரிய tissue பேப்பர் ஒன்று கண்ணில் பட்டுள்ளது.

அந்த tissue பேப்பர் கழிப்பறையில் இருந்த கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்தது. அதை எடுத்துப் பார்த்தபோது, அதில் ‘Boom 1.50 pm’ என்று எழுதப்பட்டிருந்தது தெரியவந்தது. குறிப்பிட்ட நேரத்தைக் குறிப்பிட்டு எழுதப்பட்டிருந்த இந்த வாசகம் விமானப் பணியாளருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது ஏதாவது வெடிகுண்டு மிரட்டலாக இருக்குமோ என்ற அச்சம் எழுந்தது. இதையடுத்து அவர் தாமதிக்காமல் விமானியின் கவனத்துக்கு அந்தத் தகவலைக் கொண்டு சென்றார். விமானி உடனடியாக சென்னை விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்புகொண்டு விவரத்தைத் தெரிவித்தார். மேலும், பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு விமானத்தை விரைவாகத் தரையிறக்க அனுமதி கோரினார்.

தகவல் கிடைத்ததும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் உஷாரானார்கள். வழக்கமான விமானப் பாதுகாப்பு நடைமுறைகளின்படி தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விமானம் மதியம் சுமார் 1 மணியளவில் சென்னையில் தரையிறங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பயணிகள் செல்லும் வழக்கமான முனையப் பகுதிக்கு அருகில் நிறுத்தாமல், தனிமைப்படுத்தப்பட்ட இடத்துக்கு விமானம் கொண்டு செல்லப்பட்டது. அதன்பிறகு பாதுகாப்புப் படையினர் மோப்ப நாய்களுடன் விமானத்துக்குள் சென்று சோதனையைத் தொடங்கினர். விமானத்தின் இருக்கைகள், பயணிகள் அமர்ந்திருந்த பகுதிகள், கழிப்பறைகள் மற்றும் சந்தேகத்திற்குரிய இடங்கள் என அனைத்தும் கவனமாகப் பரிசோதிக்கப்பட்டன. பயணிகளின் உடைமைகளும் தனித்தனியாகச் சோதனை செய்யப்பட்டன. இதற்கிடையே, பயணிகளிடமும் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையில் வெடிகுண்டு அல்லது சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் tissue பேப்பரில் எழுதப்பட்டிருந்த மிரட்டல் வெறும் புரளி என பாதுகாப்புப் படையினர் முடிவு செய்தனர். அதன் பிறகு பயணிகள் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தை அதிகாரிகள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செய்தி எழுதப்பட்டிருந்ததால், இதுகுறித்து விமான நிலைய காவல் நிலையத்தில் முறையான புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தச் செய்தியை எழுதியது யார், எதற்காக இத்தகைய வாசகத்தை எழுதி வைத்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.

விமானத்தில் கிடைத்த ஒரு சிறிய காகிதம் 192 பயணிகளின் பயணத்தையே பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் உண்மையா, புரளியா என்பது தெரியாத சூழலில் பாதுகாப்பு அதிகாரிகள் ஒவ்வொரு முறையும் கடுமையான சோதனைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதுடன், விமானப் போக்குவரத்திலும் தேவையற்ற பரபரப்பை உருவாக்குகின்றன. எனவே, விமானத்தில் சந்தேகத்திற்குரிய பொருள் அல்லது மிரட்டல் செய்தி தென்பட்டால் அதை உடனடியாக விமானப் பணியாளர்களிடம் தெரிவிப்பதே சரியான நடவடிக்கையாகும்.

flight cancelled
``Confident ah இருங்க நல்லதே நடக்கும் - மக்களுக்கு சொன்னீர்களா? குற்றவாளிகளுக்கா?" எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.