"மேற்காசிய போர் பதற்றம் எதிரொலி!" - சென்னை விமான நிலையத்தில் 20 விமானங்கள் தாமதம்... கொழும்பு விமானங்கள் ரத்து!

சென்னை இருந்து கொழும்பு புறப்பட இருந்த மற்றொரு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளன...
flight cancelled
flight cancelled
Published on
Updated on
1 min read

மேற்காசிய நாடுகளில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அதன் தாக்கம் சென்னை விமான நிலைய விமான சேவைகளிலும் எதிரொலித்துள்ளது. பக்ரைன், குவைத் உள்ளிட்ட நாடுகளில் பாதுகாப்பு காரணங்களால் அவ்வப்போது வான்வெளி மூடப்பட்டு வருவதால், வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் மற்றும் சென்னையில் இருந்து புறப்படும் பல்வேறு சர்வதேச விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அபுதாபி, துபாய், சார்ஜா, பக்ரைன், மஸ்கட், லண்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய சுமார் 10 விமானங்கள் தாமதமாக வந்ததால், அதே விமானங்கள் மீண்டும் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 10 விமானங்களும் தாமதமாக இயக்கப்பட்டன.

மொத்தமாக 20 சர்வதேச விமானங்கள் 30 நிமிடங்கள் முதல் 3 மணி நேரம் வரை தாமதமானதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், இன்று மதியம் கொழும்புவில் இருந்து சென்னை வர இருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமும், அதனைத் தொடர்ந்து சென்னை இருந்து கொழும்பு புறப்பட இருந்த மற்றொரு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் இலங்கை செல்ல திட்டமிட்டிருந்த பயணிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பொதுவாக விமானங்கள் தாமதம் அல்லது ரத்து செய்யப்பட்டால், அதுகுறித்து விமான நிலைய நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் முன்கூட்டியே பயணிகளுக்கு தகவல் தெரிவிப்பது வழக்கம். அதன்படி சமூக வலைதளங்கள் மற்றும் பிற அறிவிப்பு தளங்கள் மூலமும் தகவல்கள் வெளியிடப்படும்.

ஆனால், இந்த முறை விமானங்கள் தாமதம் மற்றும் ரத்து செய்யப்பட்டதற்கான முறையான அறிவிப்புகள் பயணிகளுக்கு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பலர் திட்டமிட்ட நேரத்திலேயே சென்னை விமான நிலையத்திற்கு வந்து, நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அதிருப்தி தெரிவித்து, விமான நிலைய அதிகாரிகளின் அலட்சியத்தை சுட்டிக்காட்டியுள்ளனர். மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் மட்டும் 20 விமானங்கள் தாமதமாகவும், 2 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாலும் பயணிகள் கடும் அவதியடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com