தமிழக வெற்றிக் கழக அரசின் 2026-27ஆம் ஆண்டுக்கான முதல் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில், நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்து, பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், சென்னையின் முக்கிய நீர்வழித்தடங்களான கூவம் மற்றும் அடையாறு ஆறுகளை உலகத் தரத்தில் மறுசீரமைக்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆறுகள் மறுசீரமைப்பு திட்டம்
இதுகுறித்து பட்ஜெட் உரையில், கூவம் மற்றும் அடையாறு ஆறுகளை மறுசீரமைப்பதற்காக விரிவான சாத்தியக்கூறு ஆய்வு மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறுகளை சீரமைப்பதுடன், அவற்றின் கரையோரப் பகுதிகளையும் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பொழுதுபோக்கு வசதிகள்
மேலும், கூவம் மற்றும் அடையாறு ஆறுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் படகு சவாரி, நதிக்கரை நடைபாதை மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் சென்னையின் நீர்நிலைகளை பாதுகாப்பதுடன், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய நகர்ப்புற வசதிகளும் உருவாக்கப்பட உள்ளன.
சென்னையின் புதிய அடையாளமாக கூவம், அடையாறு!
தற்போது சென்னையின் கூவம் ஆறு பல இடங்களில் மாசுபாடு, கழிவுநீர் கலப்பு, குப்பைகள் மற்றும் துர்நாற்றம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் சுற்றுப்புறப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும், அந்த வழியாகச் செல்லும் பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. ஆற்றங்கரைகளும் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ளன.
இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்ட பிறகு, கூவம் ஆற்றில் உள்ள மாசுபாடுகள் மற்றும் கழிவுகளை அகற்றி, நீர்வழித்தடம் மற்றும் கரையோரப் பகுதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் தூய்மையான சுற்றுச்சூழல், மேம்படுத்தப்பட்ட நதிக்கரை நடைபாதைகள், படகு சவாரி மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் பொதுமக்களுக்கு கிடைக்கும். குறிப்பாக, தற்போது மாசுபட்ட நீர்வழித்தடமாக பார்க்கப்படும் கூவம், எதிர்காலத்தில் சென்னையின் முக்கிய சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் ஒன்றாகவும், நகரின் புதிய அடையாளமாகவும் மாற்றப்பட வாய்ப்பு உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.