தூக்கத்தைத் தொலைத்த சென்னை மக்கள்! வீடுகளுக்குள் படை எடுக்கும் கொசுக்கள் - மாநகராட்சியின் மெத்தனம் காரணமா?

பல பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் வாகனங்கள் வருவதே இல்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்...
தூக்கத்தைத் தொலைத்த சென்னை மக்கள்! வீடுகளுக்குள் படை எடுக்கும் கொசுக்கள் - மாநகராட்சியின் மெத்தனம் காரணமா?
GFX-2
Published on
Updated on
1 min read

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடந்த சில நாட்களாகக் கொசுக்களின் தொல்லை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதாக மக்கள் மிகுந்த வேதனையுடன் புகார் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, சென்னையில் நிலவும் தட்பவெப்ப நிலை மாற்றம் மற்றும் ஆங்காங்கே தேங்கி நிற்கும் கழிவுநீரால் கொசுக்களின் உற்பத்தி பன்மடங்கு பெருகியுள்ளது. இதன் விளைவாக, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், சளி, இருமல் மற்றும் உடல்வலியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளிலும், தனியார் கிளினிக்குகளிலும் சிகிச்சைக்குக் குவியும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கொசுக்களின் அட்டகாசம் காரணமாக இரவு நேரங்களில் நிம்மதியாகத் தூங்க முடியாமல் சென்னை வாசிகள் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். கொசு வலைகள், மருந்துகள் என எதைப் பயன்படுத்தினாலும் கொசுக்களின் படையெடுப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை என மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். இது ஒருபுறமிருக்க, மாநகராட்சியின் கொசு ஒழிப்புப் பணிகள் பெயரளவில் மட்டுமே நடப்பதாகவும், பல பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் வாகனங்கள் வருவதே இல்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தத் திடீர் கொசுப் பெருக்கத்திற்குப் பின்னால் ஒரு அதிர்ச்சியூட்டும் நிர்வாகக் குறைபாடு ஒளிந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை மாநகராட்சியில் கொசுக்களைக் கட்டுப்படுத்துவதற்காக முதுநிலை பூச்சியியல் வல்லுநர்கள் முதல் களப்பணியாளர்கள் வரை மொத்தம் 292 பேர் பணியில் இருக்க வேண்டும். ஆனால், தற்போதைய நிலவரப்படி வெறும் 5 முதுநிலை வல்லுநர்கள், 6 நிரந்தர இளநிலை வல்லுநர்கள் மற்றும் 8 தற்காலிகப் பணியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். அதாவது, இருக்க வேண்டிய பணியாளர்களில் வெறும் 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களே பணியில் இருப்பதால், கொசு ஒழிப்புப் பணிகள் ஒட்டுமொத்தமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆள் பற்றாக்குறை காரணமாகத்தான் நகரின் பல பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, காலியாக உள்ள பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், உயிரிழப்புகள் ஏற்படும் முன் போர்க்கால அடிப்படையில் கொசுக்களைக் கட்டுப்படுத்தத் தேவையான கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பதே சென்னை மக்களின் ஒட்டுமொத்தக் கோரிக்கையாக உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com