இந்த ஆண்டுக்கான புற நகர் ரயில் சேவைகளின் அட்டவணையை சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ளது.
சென்னையின் புறநகர் பகுதிகளை இணைப்பதில், மின்சார ரயில்கள் முதுகெலும்பாக செயல்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் அலுவலகம் செல்ல, வியாபாரத்திற்கு செல்ல, மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்ல, என அனைத்து தேவைகளையும் புறநகர் ரயில்கள் பூர்த்தி செய்கின்றன.
சென்னை கடற்கரை முதல் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு வரை, சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை மற்றும் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஆவடி, பட்டாபிராம், அரக்கோணம், திருத்தணி உள்ளிட்ட பகுதிகளுக்கு பல ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதிலும், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு வரைச் செல்லும் ரயில்கள் 7 நிமிடங்களுக்கு ஒன்று என்ற கணக்கில் இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், இன்று முதல் புதிய அட்டவணைப் படி, புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என சென்னை ரயில்வே கூட்டம் அறிவித்துள்ளது. புதியதாக வெளியிடப்பட்டுள்ள அட்டவணைப்படி, சென்னை கடற்கரை முதல் தாம்பரம் , செங்கல்பட்டு வரை 124 ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், 8 ரயில்கள் குறைக்கப்பட்டு, தற்போது 116 ரயில்களாகவும், வேளச்சேரிக்கு இயக்கப்பட்ட 70 ரயில்களில் 9 ரயில்கள் குறைக்கப்பட்டு 61 ரயில்களாக, குறிப்பிட்ட நேர இடைவேளைகளில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல், சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஆவடி, பட்டாபிராம், அரக்கோணம், திருத்தணி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்ட 128 ரயில் சேவைகள் 124 ரயில்களாக குறைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க || மானாவாரி நிலத்தில் விளைச்சல் அமோகம்...விவசாயிகள் மகிழ்ச்சி!