
இன்று இரண்டாம் நாள் தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.
தவெக கட்சி பரப்புரைக்கு அனுமதி பெற்றது முதல், அங்கு எதனால் அசம்பாவிதம் ஏற்பட்டது? அதைத்தொடர்ந்து தமிழக அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளித்தார்.
கடந்த 27 -ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார், அங்கு மக்களில் 41 -பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானது குறித்து தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விளக்கம் அளித்துக்கொண்டிருந்தார்,
அப்போது, “பரப்புரை நடந்த இடத்திற்கு விஜய் தாமதமாக வந்ததுதான், இந்த மரணங்களுக்கு காரணம். தொடர்ந்து பேசுகையில், "கரூர் துயரத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொண்டது. இதுபோன்ற துயரங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், நடத்துவோர் அதற்குரிய நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த வேண்டும். கட்டுப்பாடுகளை மீறும் போது பாதிக்கப்படுவோர் தொண்டர்கள் தான் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்
இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, “தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் கரூர் கூட்ட நெரிசல் மரணங்களை தவிர்த்திருக்கலாம், வேலுச்சாமிபுரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று அதிமுக கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தவெகவுக்கு மட்டும் அந்த பகுதியில் அனுமதி அளித்தது ஏன்?" எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு முதல்வர், "தங்கள் கட்சியினர் பாதிக்கப்பட்டிருந்தால்கூட இப்படி ஒரு போர்க்குரல் அவர்களிடமிருந்து வந்திருக்குமா எனத் தெரியவில்லை. கூட்டணிக்கு ஆள் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால், இன்று ஈபிஎஸ் அப்படி பேசியிருக்கிறார்” என முதல்வர் பேரவையில் பதிலளித்தார்.
அவரைதொடர்ந்து பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு, "வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் இருப்பதால் நீதிமன்றம் குறித்த விமர்சனங்களை எதிர்க்கட்சித் தலைவர் தவிர்க்க வேண்டும்" என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "உங்கள் அரசாங்கம், உங்களின் காவல்துறை, முதலமைச்சர் தான் காவல்துறைக்கு அமைச்சர். அப்படி இருக்கும் போது எங்களுக்கு அனுமதி மறுத்துவிட்டு தவெகவினருக்கு அனுமதி வழங்கியது எப்படி? இது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கரூரில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களுக்கு ஒரே இரவில் உடற்கூராய்வு செய்யப்பட்டது எப்படி? அங்கு இரண்டு மேஜைகள் தான் இருந்துள்ளன." எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, "சம்பவம் நடைபெற்ற இதே இடத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும் கூட்டம் கூடியது. அப்போது எந்த அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை. உங்களை மாதிரியே அவரும் ஏற்பாடு செய்திருந்தால் இந்த அசம்பாவித சம்பவம் நடைபெற்றிருக்காது.” என்று தெரிவித்தார்.
"கூட்டம் கூடிய கதையெல்லாம் நான் கேட்கவில்லை. நான் கேட்டது உயிரிழந்தவர்களை பற்றி. ஆம்புலன்ஸ் வாகனத்தில்கூட திமுக மாவட்ட மருத்துவ அணி என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இப்போது சொல்லுங்கள் யார் இந்த விவகாரத்தில் அரசியல் செய்வது?" என கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "தமிழக அரசியல் வரலாற்றில் அரசியல் கட்சி கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்ததாக வரலாறு எங்கும் நடைபெறவில்லை. ஒரு நபர் ஆணையம் அமைத்த நிலையில் அவருக்கு வீடு வழங்கவில்லை, அலுவலகம் வழங்கவில்லை, உதவியாளர் கூட இல்லாமல் ஆணைய தலைவர் உடனடியாக கரூர் செல்கிறார். பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வேண்டியது முதலமைச்சரின் கடமை” என பேசியிருந்தார்.
"என்னுடைய கடமைக்காகதான் நான் கரூர் சென்றேன். ஆனால் தூத்துக்குடியில் நடைபெற்ற சம்பவத்தின்போது அப்போதைய முதலமைச்சர் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் என்ன சொன்னார் என்பதை சொல்லட்டுமா?" என்று ஆவேசமாக கேட்டார். உடனே குறுக்கிட்ட எடப்பாடி பழனிசாமி, "கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்து போனார்களே. அப்போது கள்ளக்குறிச்சி செல்லாதது ஏன்?" என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த முதல்வர், "கள்ளக்குறிச்சிக்கு பெரும்பாலான அமைச்சர்கள் சென்றனர். அங்கு நடைபெற்றது கள்ளச்சாராயம் அருந்தியதால் ஏற்பட்ட உயிரிழப்பு. ஆனால் இங்கு நடைபெற்றிருப்பது அப்பாவி மக்கள் மிதிபட்டு ஏற்பட்டிருக்கும் உயிரிழப்பு" என குறிப்பிட்டார்.
அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் சிவசங்கர், “கரூர் சம்பவத்திற்கு முதல்வர்தான் பதிலளிக்க வேண்டும் என்கின்றனர். ஆனால் பட்டப்பகலிலே வாகனத்தின் மீது அமர்ந்து கொண்டு தூத்துக்குடியில் போராடிய மக்களின் நெஞ்சில் சுட்டார்களே அதற்கு அப்போதைய முதலமைச்சர் பதில் கூறினாரா?" எனக் கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் சிவசங்கரின் பேச்சை நீக்கக் கோரி அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். பின்னர் வெளிநடப்பு செய்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.