புயலின் தாக்கத்தை எதிர்க்கொள்ளும் வகையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள், துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை மறுநாள் புயலாக உருமாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் அரசு துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதையும் படிக்க : அயோத்திதாசப் பண்டிதரின் மணிமண்டபம் திறப்பு...!
இக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர், புயலின் தாக்கத்தை எதிர்க்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல்களை வழங்கினார். பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கி நிவாரண மையங்களில் தங்க வைக்க வேண்டும் எனவும், நிவாரண முகாம்களில் உணவு, குடிநீர் மின்சார வசதி உள்ளிட்ட தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் இருப்பதையும் மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறினார்.
புயலின் சீற்றம் காரணமாக விழக்கூடும் மரங்களை உடனடியாக அகற்றும் குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் அவசர சிகிச்சை பிரிவு செயல்படுவதை உறுதி செய்திட வேண்டும் என்றும், பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் பல்துறை மண்டல குழுக்களை முன்கூட்டியே நிலை நிறுத்த வேண்டும் எனவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.