
நாட்டின் பன்முக தன்மையை சிதைத்து ஜனநாயகத்தை வேரறுக்கும் சூழ்நிலையில், ஜனநாயகத்தை மீட்பதில் திமுக முனைப்போடு களம் இறங்க வேண்டும் என தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜனநாயகத்தை மீட்பதில் திமுக முனைப்போடு களம் இறங்க வேண்டும் என தொண்டர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இதுகுறித்து அவர் எழுதிய அழைப்பு மடலில், நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான பணிகளில் முனைப்புடன் தொண்டர்கள் செயல்பட வேண்டும் என கூறியுள்ளார். மேலும், ஜனநாயகம் காத்திடும் வீரர்களான கழக உடன்பிறப்புகளே ஆயத்தமாவீர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல்கட்டமாக தீரர்கள் கோட்டமாம் திருச்சியில் வரும் 26-ம் தேதி டெல்டா மாவட்டங்களின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெறுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். திமுக தொணடர்கள் ஒவ்வொருவரும் நடமாடும் ஊடகமாக மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், களத்தில் கவனம் செலுத்திப் பணியாற்றும்போது, அரசியல் எதிரிகளை உமியென ஊதித் தள்ளி அரிசியினும் வெற்றியை அள்ளிக் குவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
டெல்டாவில் அதற்கான முதல் களம் அமைந்துள்ளது எனவும், மற்ற மண்டலங்களிலும் விரைவில் தங்கள் அன்பு முகம் காண்பேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.