சிறுவன் கடத்தல் விவகாரம்: நாடு போலீஸ் ராஜ்யத்திற்கு செல்கிறதா!? - நீதிபதிகள் வருத்தம்..!

madras high court
madras high court
Published on
Updated on
1 min read

காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்ணின் தந்தை வனராஜ் உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்த  சென்னை உயர் நீதிமன்றம், நாடு போலிஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ என அச்சம்  தெரிவித்துள்ளது..

திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர், இன்ஸ்டாகிராம் மூலம் தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார்.
திருமணத்துக்கு விஜயஸ்ரீ  பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, பெண்ணை தேடி தனுஷ் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர் இல்லாததால், தனுஷின் சகோதரரை கடத்திச் சென்று,  பின்னர் இரவு பேருந்து நிறுத்தம் ஒன்றில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். 


இது தொடர்பாக தனுஷின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே வி குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்த போலீசார், பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைது செய்தனர். 

இந்த வழக்கில் ஜாமீன் வழங்க உத்தரவிடக் கோரி வனராஜ், மணிகண்டன், கணேசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கியமானவர்கள் இன்னும் கைது செய்யப்படாததால் மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும் என்ற காவல் துறை வாதத்தை ஏற்று, மூவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ள போதும், வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கைகளை பார்க்கும்போது விசாரணையில் போதுமான முன்னேற்றம் இல்லை. இதுவரை நடந்த விசாரணை நம்பிக்கை ஏற்படும் வகையில் இல்லை. அரசு இயந்திரம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணம் என நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். 

சாதாரண மக்களின் வாழ்வு, சுதந்திரம் குறித்த கவலையை இந்த வழக்கு ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை பார்க்கும் போது,  நாடு போலீஸ் ராஜ்யத்திற்கு செல்கிறதோ என்று அச்சம் கொள்ள வைக்கிறது என தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் சந்தேகிக்கப்படும் நபர்களாக மூத்த ஐபிஎஸ் அதிகாரியும், சட்டமன்ற உறுப்பினராகவும் பளம் வாய்ந்த அரசியல் கட்சியின் தலைவராகவும் உள்ள ஒருவரும் உள்ளதால், காவல் துறை அறிக்கையில் கூறியபடி, விசாரணையை முறையாக நடத்தி, காவல்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை மீட்டெடுக்கப்படும் என நம்புவதாகவும் நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com