
ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைப்பது மற்றும் நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதனை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அதிகனமழையின் காரணமாக கடுமையான மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் தலா 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மழையினால் பாதிக்கப்பட்ட 33 விழுக்காட்டிற்கு மேல் பாதிக்கப்பட்ட நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 17 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதமுற்றிருப்பின் இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு 22 ஆயிரத்து 500 ருபாய் வழங்கிடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மழையினால் பாதிக்கப்பட்ட மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 8 ஆயிரத்து 500 ரூபாயும், எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக 37 ஆயிரத்து 500 ரூபாயும், கோழி ஒன்றுக்கு 100 ரூபாய் நிவாரணமாக வழங்கிடவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதே போல், வெள்ளத்தில் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார், குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு புதிய அட்டை வழங்க சிறப்பு முகாம் நடத்தபடும் எனவும், மழையில் பாட புத்தகங்களை இழந்த மாணவ, மாணவிகளுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை கணக்கிட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது