சென்னை 6% பெங்களூரு 14.5%.. 6வது இடத்துக்கு தள்ளப்பட்ட விமான நிலையம்.. விஜய் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் என்ன சொல்கிறார்?

சென்னை விமான நிலையத்தை 'இந்திய விமான நிலையங்கள் ஆணையம்' (AAI) அல்லாத ஒரு திறமையான இயக்குநரிடம் ஒப்படைக்கும்படி முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
PM Modi, CM Vijay, Chennai International Airport
சென்னை 6% பெங்களூரு 14.5%.. 6வது இடத்துக்கு தள்ளப்பட்ட விமான நிலையம்.. விஜய் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் என்ன சொல்கிறார்?
Published on
Updated on
3 min read

சென்னை விமான நிலையத்தை தனியாருக்கு கொடுக்கும்படி முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் கடந்த வாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

குறிப்பாக கடிதம் குறித்த தகவல்களை வெளியிடாமல் மறைமுகமாக செயல்பட்டதாக அரசு மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த சூழலில் முதலமைச்சர் விஜய், பிரதமருக்கு எழுதிய கடிதம் வெளியாகியிருக்கிறது.

பிரதமர் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்ட காலக்கெடுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஜய் அவசரப்படுத்தியிருக்கிறார்.

அந்தக் கடிதத்தில் சென்னை விமான நிலையத்தை 'இந்திய விமான நிலையங்கள் ஆணையம்' (AAI) அல்லாத ஒரு திறமையான இயக்குநரிடம் ஒப்படைக்கும்படி முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு சில முக்கிய காரணங்களை முன்வைத்துள்ளார்.

விஜய் சொல்லும் காரணங்கள்

  • சென்னை விமான நிலையத்தில் செயல்திறன் மோசமான நிலைக்கு குறைந்துள்ளது. இந்தியாவின் மிக முக்கியமான நுழைவு வாயிலாக இருந்தாலும் சர்வதேச தரநிலைகள் மற்றும் பயணிகளின் எதிர்பார்ப்புகளை எட்டவில்லை.

  • 'இந்திய விமான நிலையங்கள் ஆணையம்' (AAI) ஏப்ரல் 2026ல் வெளியிட்ட தரவுகளின்படி பயணிகள் போக்குவரத்தில் கொல்கத்தாவுக்கு பின் 6வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மற்ற மெட்ரோபொலிடன் நகரங்கள் வேகமாக வளர்ந்துவரும் நிலையில் சென்னை விமான நிலையம் கோவிட் பெருந்தொற்று காலத்துக்கு முந்தய அளவிலேயே விமானங்களை இயக்கி வருகிறது.

  • சென்னை விமானநிலையத்தின் பயணிகள் முனையம் ஆண்டுக்கு 27 மில்லியன் பயணிகளை (MPPA) கையாளும் திறனைக் கொண்டுள்ளது. இப்போது நடந்துவரும் மேம்பாட்டு பணிகள் முடிந்தால் 35 மில்லியனாக உயரும். இருப்பினும், 2025-26 நிதியாண்டுக்கான AAI அறிக்கை, இந்த விமான நிலையம் 23.01 மில்லியன் பயணிகளை மட்டுமே கையாண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கோவிட்-க்கு முந்தைய அளவான 22.54 மில்லியன் பயணிகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த வளர்ச்சியையே பிரதிபலிக்கிறது.

CM Vijay Met PM Modi
CM Vijay Met PM ModiDIPR
  • சரக்கு கையாளுதலிலும் (Cargo Operations) சென்னை விமான நிலையத்தின் பலவீனமாக இருப்பதை AAI தரவு எடுத்துக்காட்டுகிறது. கோவிட் பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில் மே 2026-இல், சென்னையில் மொத்த சரக்கு விமான இயக்கங்கள் 6% மட்டுமே அதிகரித்துள்ளன, அதே நேரத்தில் பெங்களூரு 14.5% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது, இது போட்டி விமான நிலையங்களில் மிக வேகமான சரக்கு சேவை விரிவாக்கத்தைக் காட்டுகிறது.

  • சென்னை விமான நிலையம் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்தில் 36 விமானங்களை கையாளும் திறனைக் கொண்டிருக்கிறது என E-AIP India AMDT கூறுகிறது. இருப்பினும், உண்மையான செயல்பாடுகள் இந்தத் திறனை விடக் கணிசமாகக் குறைந்துள்ளன.

  • 2025-26 நிதியாண்டில், விமான நிலையம் 158,702 விமான இயக்கங்களை மட்டுமே கையாண்டுள்ளது, சராசரியாக நாளொன்றுக்கு சுமார் 435 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளன. இதில், உள்நாட்டு விமான இயக்கங்கள் சுமார் 320, சர்வதேச விமான இயக்கங்கள் 115. இது விமான நிலையம் தனது முழு செயல்பாட்டுத் திறனையும் பயன்படுத்தவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இருக்கிற உள்கட்டமைப்பைத் குறைவாகவேப் பயன்படுத்துவது, இந்தியாவின் முக்கிய விமான நிலையங்களுக்கு மத்தியில் சென்னையின் போட்டித் தன்மையைப் பலவீனப்படுத்தியுள்ளது.

  • சென்னை விமான நிலையம் தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் மீதான முதலீட்டுப் பார்வையை நேரடியாகப் பாதிக்கிறது. மோசமான முனைய அணுகல், சீரில்லாத டாக்ஸி சேவைகள், போதிய வசதியின்மை மற்றும் போதிய பார்க்கிங் வசதி இல்லாதது போன்ற பல செயல்பாட்டுக் குறைபாடுகளை தொழில்துறை தலைவர்கள் அடிக்கடி சுட்டிக்காட்டுகின்றனர்.

  • விமான நிலையத்தின் பிரீமியம் சேவை இடைவெளிகளை விட அடிப்படை பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு பிரச்சினைகள் அதிகமாக உள்ளன. பராமரிக்கப்படாத கழிப்பறைகள், பயணிகள் அமரும் இடங்களில் போதிய தூய்மையின்மை மற்றும் ஏர்-கண்டிஷனிங் அமைப்புகளில் ஏற்படும் தொடர்ச்சியான கோளாறுகள். போதிய நிலப்பரப்பு உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, பொருட்களை ஒப்படைப்பதில் தாமதம், போதிய கூட்ட நெரிசல் மேலாண்மை இல்லாமை மற்றும் பாதுகாப்பு பரிசோதனை மற்றும் குடியுரிமை (இமிகிரேஷன்) கவுண்டர்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை போன்ற செயல்பாட்டுக் குறைபாடுகள் உள்ளன.

  • ​சர்வதேச முனையத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் நிறைவடைவதில் ஏற்படும் தாமதத்தால் அவசியமான நவீனமயமாக்கல் மற்றும் திறன் மேம்பாட்டுப் பணிகள் தள்ளிப்போகின்றன.  

  • ​சென்னையின் வலுவான பொருளாதார அடிப்படை, விரிவடைந்து வரும் தொழில்துறை, வளர்ச்சி பாதையில் உள்ள ஆட்டோமொபைல் மற்றும் உற்பத்தித் துறைகள், வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத் துறை (IT) மற்றும் அதிகரித்து வரும் சுற்றுலா சாத்தியக்கூறுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் முன்னணி பெருநகர மையங்களில் ஒன்றாக அதன் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு விமான நிலையம் அமைவது அவசியம்.

  • ஒரு நவீன, சிறப்பாக நிர்வகிக்கப்படும் விமான நிலையம், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். வர்த்தகம் மற்றும் முதலீட்டை வலுப்படுத்தும், பிராந்திய இணைப்பை மேம்படுத்தும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கணிசமாக பங்களிக்கும்.  

​அந்தக் கடிதத்தில், "மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திற்கு (AAI) பதிலாக, சென்னை சர்வதேச விமான நிலையத்தின் இயக்கம், மேலாண்மை மற்றும் எதிர்கால வளர்ச்சியை தகுதியான வேறு ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்க மிக உயர்ந்த முன்னுரிமை அளிக்குமாறு  கேட்டுக்கொள்கிறேன்." எனக் கோரிக்கை வைத்துள்ளார் முதல்வர்.

PM Modi, CM Vijay, Chennai International Airport
ஜெம் வீரமணி POCSO வழக்கில்.. ‘Final Report’-ஐ ஏற்க மறுத்து கடைசி வரை உறுதியாக நின்ற நீதிபதி பத்மா - சல்யூட்!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com