“என் புள்ளைய அடிச்சு கொன்னுட்டாங்க!” – கோவை கல்லூரி மாணவர் அமுதனின் தந்தை கதறல்.. சட்டப்பேரவையில் எதிரொலித்த சம்பவம்

கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில்
covai student death
covai amudhan
Published on
Updated on
2 min read

கோவை மலுமிச்சம்பட்டியில் சக மாணவர்கள் தாக்கியதில் 20 வயது கல்லூரி மாணவர் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 17 வயது சிறுவன் உட்பட 5 மாணவர்களை செட்டிப்பாளையம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை–பொள்ளாச்சி சாலையில் மலுமிச்சம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அமுதன் (20) என்பவர் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதிக்கு பதிலாக நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி படித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி அதிகாலை, ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் மாணவர் இளவரசன் தங்கியிருந்த அறைக்கு அமுதன் உள்ளிட்ட சிலர் சென்றதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்போது அறையில் இருந்த மாணவர்களை மிரட்டி செல்போனை பறித்துச் சென்றதாகவும், இதுகுறித்து இளவரசன் செட்டிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதே நாள் காலையில் அமுதனும் அவரது நண்பர் ஸ்ரீமனும் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது இளவரசனின் அறையில் தங்கியிருந்த சில மாணவர்கள் அமுதனை அடையாளம் கண்டு வழிமறித்ததாகவும், அவரை கல்லூரியின் பின்புறப் பகுதிக்கு அழைத்துச் சென்று தாக்கியதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தாக்குதலுக்குப் பிறகு காலை சுமார் 10 மணியளவில் அமுதன் தனது அறைக்குத் திரும்பியுள்ளார். ஆனால் மதியம் சுமார் 3 மணியளவில் அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அமுதன் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாணவர் உயிரிழந்த தகவல் அறிந்த செட்டிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக, சக மாணவர்கள் தாக்கியதில் ஏற்பட்ட காயங்களின் காரணமாக அமுதன் உயிரிழந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவரது நண்பர் ஸ்ரீமன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் 17 வயது சிறுவன் உட்பட ஆறுமுகன் (20), அரவிந்த் (21), சிவரோகித் (20), மணிபாலு (20) ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, மகனை இழந்த தந்தையின் கதறல் காண்போரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. “அந்த காலேஜ் பசங்க என் புள்ளைய அடிச்சு கொன்னுட்டாங்க.. இனிமே என் பையன் திரும்பி வரமாட்டான் சார்” என்று அவர் வேதனையுடன் கூறியுள்ளார். மேலும், “இன்னைக்கு என் புள்ள இல்ல சார்... இதுக்கு நீதி நீங்க தான் சொல்லணும்” என்று அவர் கண்ணீருடன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது.

மாணவர் அமுதனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது சொந்த ஊரான கள்ளக்குறிச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பவத்திற்கான முழுமையான பின்னணி மற்றும் அமுதனின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இன்று சட்டமனற்ற விவாதத்தில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இது குறித்து ஆளும் தவெக அரசு பொறுப்பேற்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார். அவர் பேசியதாவது “கோவையில் போதைப்பொருள் விற்பனை பற்றி போலீசில் தகவல் அளித்த மாணவர் அமுதன் அடித்து கொல்லப்பட்டுள்ளார். இதற்கு அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். உரிய விளக்கம் கொடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

 அதை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், “மாணவர்கள் இடையே ஏற்பட்ட சிறு சட்ட ஒழுங்கு பிரச்சனை என்பது மாணவர்களுக்கு இடையே ஏற்கனவே கோஷ்டி மோதல் இருந்துள்ளது” எனத் தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com