கல்லூரி மாணவியிடம் செல்போனில் மிரட்டி பேசிய காவலரின் ஆடியோ இணையத்தில் வைரல்..!

கல்லூரி மாணவியிடம் செல்போனில் மிரட்டி பேசிய காவலரின் ஆடியோ இணையத்தில் வைரல்..!
Published on
Updated on
1 min read

கல்லூரி மாணவிக்கு தொல்லை கொடுத்த காவலரை, மாணவியின் காதலன் கண்டித்ததால், விபச்சார வழக்கு போட்டுவிடுவதாக மிரட்டிய காவலரின் ஆடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காதல் ஜோடியை மிரட்டிய ரோந்து போலீசார்:

சென்னை அடுத்த போரூர் சுங்கச்சாவடி அருகே, நேற்று முன்தினம் இரவு வளசரவாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், தனது காதலனுடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் இருவர், காரில் இருந்தவர்களை மிரட்டியுள்ளனர். அப்போது இருவரும் காதலிப்பதாகவும், இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் கூறியுள்ளனர். ஆனால், அதை கேட்காத போலீசார், அவர்களது குடும்பத்தினரை  தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக குடும்பத்தாரும் தெரிவித்துள்ளனர். இருந்த போதிலும் அவர்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை வாங்கிக் கொண்டு, போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

மாணவிக்கு தொல்லை கொடுத்து வந்த காவலர்:

இதனையடுத்து, ரோந்து பணியில் ஈடுபட்ட காவலரில் ஒருவரான கிருஷ்ண குமார், நள்ளிரவில் கல்லூரி மாணவிக்கு போன் செய்துள்ளார். அப்போது மாணவியின் தோழி  ஒருவர் தொலைபேசி எண்ணை கொடுத்ததாகக் கூறி பேச முயன்ற காவலர், ஒரு கட்டத்துக்கு மேல் இளம்பெண்ணின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், உன் மீது உன் காதலனின் தந்தை புகார் அளித்துள்ளார் எனக்கூறி காவலர் மிரட்டியுள்ளார். 

காவலரை கண்டித்த மாணவியின் காதலன்:

அப்பெண் நடந்தவற்றை தன் காதலனிடம் கூற, அந்த இளைஞரும் காவலரை தொடர்பு கொண்டு கண்டித்துள்ளார். இதனால் இளம்பெண் மீது பாலியல் வழக்கு போட்டுவிடுவதாக  கூறி மிரட்டியுள்ளார். அதனையடுத்து, காதலர்கள் இருவருக்கும், வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியும், தொலைபேசி மூலமும் காவலர் கிருஷ்ணகுமார் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

தகுந்த ஆதாரங்களுடன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த காதலர்கள்:

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இருவரும், காவல் ஆணையர் அலுவலகத்தில், தகுந்த ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, காவலர் கிருஷ்ண குமாரிடம் துணை ஆணையர், துறை ரீதியிலான விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com