
கடந்த 2019 -ஆம் தேசிய கல்விக்கொள்கையை மத்திய அரசு அறிமுகப்படுத்த கருத்துகேட்பு நடத்தியது. ஆனால் இது ஒன்றும் புதிது அல்ல கடந்த 2000 -ஆம் ஆண்டே வாஜ்பாய் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த புதிய கல்விக்கொள்கை குருகுல கல்வி மற்றும் பிறப்பின் அடிப்படையில் வேலை, மும்மொழி கொள்கை ஆகிய காரணங்களை முன்வைத்து தமிழ்நாடும் அரசும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழக அரசு, மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என அறிவித்தது. அதை வடிவமைக்க டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022-ல் அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டு, கல்விக் கொள்கைக்கான 520 பக்க வரைவு அறிக்கையை 2023 அக்டோபரில் வடிவமைத்தனர். தமிழக அரசிடம் அறிக்கையை 2024 ஜூலை 1-ல் சமர்ப்பித்தனர். அதன், ஓராண்டுக்குப் பிறகு தற்போதுதான் பள்ளிக் கல்விக்கான கல்விக் கொள்கை 2025 -ஐ வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த கல்விக்கொள்கையை திரும்பப்பெற வேண்டும் என குழுவில் இடம் பெற்றிருந்த கல்வியாளர் ஜவகர்ணேசன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழக அரசு வெளியிட்டுள்ள மாநில கல்விக் கொள்கையில் புதிதாக எந்த திட்டமும் இல்லை; ஆழமான அலசலோ ஆக்கபூர்வமான தீர்வுகளோ இல்லாத இந்த கல்விக் கொள்கையை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் என அக்குழுவில் இடம் பெற்றிருந்த கல்வியாளர் ஜவகர்ணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டுள்ள நிலையில் அது பற்றிய தன்னுடைய கருத்துக்களை தெரிவிப்பதற்காக கல்வியாளர் ஜவகர்ணேசன், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், இரு மொழிக் கொள்கை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி இல்லம் தேடி கல்வி கலைத் திருவிழா போன்ற அனைத்துமே ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் திட்டங்கள் தான். இதில் புதிதாக எதுவும் இல்லை.
இது தவிர நவீன அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப புதிய பாடத்திட்டங்களை கொண்டு வருவதற்கான எந்தவிதமான ஆக்கபூர்வ அறிவிப்புகளும் இதில் இல்லை.
பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து என்பதும் ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஒன்றுதான்.
தென் மாவட்டங்களில் மாணவர்கள் மத்தியில் மேலோங்கி உள்ள சாதிய வன்முறையில் ஈடுபடும் மனநிலையை மாற்றுவதற்கான தீர்வு இதில் குறிப்பிடப்படவே இல்லை.
ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சிகளை கொடுப்பதற்கான திட்டங்கள் பற்றி இந்த கல்விக் கொள்கையில் எதுவும் இடம்பெறவில்லை.
தேசிய கல்விக் கொள்கை எப்படி புறந்தள்ள வேண்டிய ஒன்றோ அதேபோலத்தான் இந்த மாநில கல்விக் கொள்கையிலும் எடுத்துக் கொள்ள புதிய விஷயங்கள் எதுவும் இல்லை.
மேலும் பொதுமக்கள் தளத்தில் வெளியிட்டு விவாதங்கள் , கருத்துக்கள் கேட்டு இந்த கல்விக் கொள்கையை கொண்டு வந்திருக்கலாம் ஆனால் அவ்வாறு செய்யவில்லை.
தேசிய கல்விக் கொள்கையின் பாதிப்பிற்காக தான் மாநில கல்விக் கொள்கையை உருவாக்கப்பட்டது. தேசிய கல்விக் கொள்கையின் பாதிப்புகள் அதிகம் இருப்பதே உயர் கல்வித் துறையில் தான்.. அந்த உயர் கல்வி துறைக்கான கல்விக் கொள்கையை தமிழக அரசு வெளியிடாமல் வெறும் மாநிலக் கல்விக் கொள்கையை மட்டும் பெயரளவுக்கு வெளியிட்டுள்ளது.
அதிலும் அந்த 14 பேர் கொண்ட குழுவினர் கொடுத்த பல நல்ல அம்சங்களை நீக்கிவிட்டு யாரை திருப்திப்படுத்துவதற்காக இந்த வெற்று பக்கங்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.
எனவே தமிழக அரசு இதனை ரத்து செய்துவிட்டு புதிய குழு அமைத்து அடுத்த பல ஆண்டுகளுக்கு அறிவான தலைமுறையை உருவாக்கும் வகையிலான தொழில்நுட்ப ரீதியிலான நவீன வளர்ச்சிக்கு ஏற்ப பாடத்திட்டங்கள் உருவாக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.