காங்கிரஸின் திடீர் 'ஜனநாயகன்' ஆதரவு.. 'ஏன் இப்படி பண்றாங்கன்னு எனக்கு தெரியல' - வெளிப்படையாக பேசிய கே.என்.நேரு!

கூட்டணி மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்து அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றியும் தனக்கு எதுவும் தெரியாது...
காங்கிரஸின் திடீர் 'ஜனநாயகன்' ஆதரவு.. 'ஏன் இப்படி பண்றாங்கன்னு எனக்கு தெரியல' - வெளிப்படையாக பேசிய கே.என்.நேரு!
Published on
Updated on
2 min read

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அரசியல் முதல் சினிமா வரை பல அதிரடியான கேள்விகளுக்குப் பதிலளித்தார். குறிப்பாக, நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு ஏற்பட்டுள்ள தணிக்கை சிக்கல்கள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. இந்தப் படத்திற்குத் தணிக்கை வாரியம் முட்டுக்கட்டை போடுவதாகக் கூறி காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இது குறித்து திமுகவின் நிலைப்பாடு என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் நேரு, "மத்திய அரசு தான் தணிக்கை வாரியத்தை வைத்துள்ளது. இதற்கும் திமுக அரசுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை" என்று மிகவும் தெளிவாகக் கூறினார். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில்கூட இது போன்ற சினிமா பிரச்சனைகள் வந்தபோது, சம்பந்தப்பட்டவர்கள் தான் நேரடியாகப் பேசித் தீர்த்துக் கொண்டார்கள். காங்கிரஸ் எம்பிக்கள் எதற்காக இந்தப் படத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறார்கள், அவர்களின் அரசியல் கணக்கு என்ன என்பது தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறினார். கூட்டணி மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்து அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றியும் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி அந்த விவகாரத்திலிருந்து லாவகமாக விலகிச் சென்றார்.

அடுத்ததாக, பொங்கல் பரிசு மற்றும் ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் குறித்து அவர் பேசினார். திருச்சி மாவட்டத்தில் மட்டும் சுமார் 10 லட்சம் ரேஷன் கார்டுகள் இருப்பதாகவும், தனது தொகுதியில் மட்டும் 94,000 கார்டுகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தினமும் காலையிலும் மாலையிலும் 100 பேருக்கு வீதம் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களில் அனைவருக்கும் பொங்கல் பரிசு சென்றடைந்துவிடும் என்றும் அவர் உறுதி அளித்தார். அதேபோல், மாணவ - மாணவிகளுக்கு சுமார் 19,000 லேப்டாப்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், இதற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருப்பதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி மற்றும் அமித் ஷா சந்திப்பு குறித்தும் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதிமுக இப்போதுதான் தங்களைப் பலப்படுத்திக் கொள்ள முயற்சி செய்து வருவதாகவும், ஆனால் திமுக ஏற்கனவே மிகவும் வலுவாக இருப்பதாகவும் நேரு பதிலடி கொடுத்தார். தேர்தல் அறிக்கை குறித்துப் பேசிய அவர், முன்னாள் முதல்வர் கலைஞர் தேர்தல் அறிக்கையை எப்போதுமே 'தேர்தலின் கதாநாயகன்' என்று சொல்வார், இந்த முறையும் திமுகவின் தேர்தல் அறிக்கை மிகவும் சிறப்பாகவும், அதிரடியாகவும் இருக்கும் என்று கூறினார். ஏற்கனவே சொன்ன வாக்குறுதிகளில் 85 சதவீதத்திற்கும் மேலாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், பழைய பென்ஷன் திட்டம், லேப்டாப் விநியோகம் மற்றும் பொங்கல் பரிசு போன்ற திட்டங்கள் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் பெருமிதம் கொண்டார்.

மேலும், எடப்பாடி பழனிசாமி ஆளுநரைச் சந்தித்து திமுக மீது ஊழல் புகார் கொடுத்தது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, "அவர் சும்மா இருக்கக் கூடாது என்பதற்காகப் போயிருக்கிறார்" என்று கிண்டலாகப் பதிலளித்தார். பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா அடிக்கடி தமிழகம் வருவதால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்றும், அதிமுகவுக்கு வாக்களித்தால் அது பிஜேபி ஆட்சிக்குத்தான் வழிவகுக்கும் என்ற முதல்வரின் கருத்தை வழிமொழிந்த அவர், திமுக தான் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் என்று உறுதியாகக் கூறினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com