சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் பெரும்பாலான பகுதிகள் இதனால் வெள்ளக்காடாக மாறியுள்ளது. சாலைகளில் தேங்கி இருக்கும் தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று சென்னையில் வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார். சென்னையிலும் முதல்வர் ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில் அண்ணாமலை நேற்று ஆய்வு செய்தார். தண்ணீர் தேங்கி இருக்கும் பகுதியில் படகில் சென்று இவர் பார்வையிட்டார்.
இதில் அண்ணாமலை வீடியோ சூட் செய்வது போல் அந்த வீடியோ வெளிவந்துள்ளது. எப்படி வீடியோ எடுக்க வேண்டும், எப்படி ஃபிரேம் வைக்க வேண்டும் என்று அண்ணாமலை மற்றும் பாஜகவினர் ஆலோசனை செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. திமுகவினர், காங்கிரஸ் கட்சியினர் பலர் இந்த வீடியோவிற்கு கண்டனம் தெரிவித்து கலாய்ந்து வருகின்றனர். மழை நேரத்தில் இப்படி வீடியோ சூட் எடுப்பது விளம்பரம் தேட என்று இணையத்தில் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு காங்கிரஸ் மூத்த எம்பி ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார். வீடியோ சூட் எடுத்ததற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ட்வீட் செய்துள்ளார். அதில், மக்கள் மழை,வெள்ளத்தோடு போராடிக்கொண்டிருக்கும்போது, அவர்கள் துயரில் ஷூட்டிங் நடத்தி விளம்பரம் தேடுவது என்ன மாதிரியான மனநிலை?! அரசியல் அவலத்தின் உச்சகட்டம் இது. பாஜகவின் விளம்பர அரசியல் வெறுப்படைய செய்கிறது. ஒரு அரசியல்வாதியாக வருந்துகிறேன், என்று அண்ணாமலைக்கு ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.