ஒப்பந்த பணியாளர்களாக 25 ஆண்டுகள்...பணி நிரந்தரம் கோரி சாலை மறியல்!

ஒப்பந்த பணியாளர்களாக 25 ஆண்டுகள்...பணி நிரந்தரம் கோரி சாலை மறியல்!
Published on
Updated on
1 min read

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகைளை வலியுறுத்தி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் தமிழகம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மின் உற்பத்தி, மின் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் சுமார் 12 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 25 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

சென்னை  கே.கே.நகரில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய  ஒப்பந்த ஊழியர்கள் திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். அப்போது, தேர்தல் வாக்குறுதிப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தின் போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூர்-கோவை சாலையில் உள்ள தலைமை பொறியாளர் மண்டல அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மறியலில் ஈடுபட்டனர். இயற்கை சீற்றங்களின்போது,  இரவு பகலாக பணியாற்றி, மின்வாரியத்தை தலை நிமிர வைத்த தங்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஊழியர்கள் வலியுறுத்தினர். 

இதேபோன்று, திருப்பத்தூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. . 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com