பட்டியலினத்தோர் பற்றி சர்ச்சை பேச்சு; சீமான் நீதிமன்றத்தில் ஆஜர்!

பட்டியலினத்தோர் பற்றி சர்ச்சை பேச்சு; சீமான் நீதிமன்றத்தில் ஆஜர்!
Published on
Updated on
1 min read

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது பட்டியலினத்தோர் குறித்து தவறாக பேசியது தொடர்பான வழக்கில், ஈரோடு நீதிமன்றத்தில்  இன்று சீமான் ஆஜராகினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஆதரவு தெரிவித்து கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி ஈரோடு திருநகர் காலனியில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பட்டியலினத்தவர் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்துப் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, பிரசார பொதுக்கூட்டத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தினரையும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் அவதூறாக பேசியதாக சீமான் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் மேற்கண்ட வழக்கில் விசாரணைக்காக, ஈரோடு மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் இன்று  ஆஜராகும்படி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பியது. இதைத்தொடர்ந்து திருப்பூரில் இருந்த சீமானிடம் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் கடந்த 2ந் தேதி இந்த சம்மனை வழங்கினர்.

இதனை அடுத்து சீமான் ஈரோடு மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் விசாரணைக்காக ஆஜராகினார். அவரைக் காண ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிக அளவில் திரண்டனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com