ஓசூர் மலைக்கோவில் குடமுழுக்கு விவகாரத்தில் இந்து அமைப்பினர் கைதுக்கு சிவசேனா கண்டனம்தெரிவித்து, இதுகுறித்து நடுநிலை விசாரணை கோரி சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் மலை கோயில் ராஜகோபுர கும்பாபிஷேகம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. அப்போது தமிழ் தேசிய பேரியக்கத்தைச் சார்ந்த சிலர் தமிழ் மொழியில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என கூறியதால் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக பிஜேபியைச் சார்ந்த இரண்டு நிர்வாகிகள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இதற்கு பிஜேபி கண்டனம் தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து சிவசேனா கட்சியும் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. 'வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு முதலில் திருக்கோயிலுக்குள் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யாமல், ஒரு தலைப்பட்சமாக இந்து அமைப்பைச் சார்ந்தவர்களை மட்டும் கைது செய்து இருப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். எனவே இதில் நடுநிலமையோடு இரு தரப்பினரின் மீதும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என கோரி சிவசேனா கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் எம் முரளி மோகன் தலைமையில் ஓசூர் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முரளி மோகன்:-
" குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்தவித மாற்று கருத்தும் கிடையாது. அவ்வாறு கோரிக்கைகளை உரிய அறநிலைத்துறை அதிகாரிகளிடம் வைக்க வேண்டுமே தவிர குடமுழுக்கு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்த நேரத்தில் அந்த இடத்தில் வந்து உள்நோக்கத்தோடு சிலர் இதுபோன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளனர்.
இதில் தமிழக அரசின் காவல்துறை இந்து அமைப்பைச் சார்ந்தவர்களை மட்டும் குறி வைத்து கைது செய்துள்ளது. இது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். எனவே இரு தரப்பினரையும் உரிய விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உண்மையான கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓசூர் சார் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். உரிய நடவடிக்கை தமிழக அரசு மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது. அவ்வாறு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டங்கள் நடத்தப்படும்", என எச்சரித்தார்.