சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா நோய் தொற்று பாதிப்பு இருக்கும் சூழலில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில், பள்ளிகள் கடந்த 1ம் தேதி முதல் திறக்கப்பட்டு 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறக்கப்பட்டதில் இருந்து தமிழகம் முழுவதும் சில மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 4ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அந்தப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட 104 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், வேறு யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து, சென்னை பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு கடந்த 8ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த மாணவரின் குடும்பத்தினர் உட்பட வகுப்பில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், மற்றவர்களுக்கு தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.
மேலும், சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலை பள்ளி 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு கடந்த 9ம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த வாரத்தில் மட்டும் சென்னையில் 3 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.