அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் இதற்கு முன்னதாகவே வருமான வரித்துறை சோதனை நடைபெற்றிருக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, இலங்கை பொருளாதார ரீதியாக மீண்டும் வளர்ந்து வருகிறது. இந்தியா சார்பில் நான்காயிரம் வீடுகள் மலையாகப் பகுதியில் கட்டிக் கொடுக்கபட்டுள்ளது. புதிதாக 10,000 வீடுகள் இந்திய அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 14 ஆயிரம் வீடுகள் மொத்தமாக வரப்போகிறது.
அங்கு வாழும் தமிழர்களுக்கு பல்வேறு உதவிகள் இந்திய அரசு சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியா செய்த பொருளாதார உதவிகளுக்காக இந்திய பிரதமருக்கும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இலங்கை அதிபர் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
அமைச்சர் எ.வ.வேலு மருத்துவக் கல்லூரிகளை திறந்து கொண்டே இருக்கிறார். அவருக்கு வருமான வரித்துறை சோதனை எப்போதோ வந்திருக்க வேண்டும். ஆனால் இப்போதுதான் வந்து இருக்கிறார்கள். அதன்படி சோதனை நடக்கிறது.
எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் ஊழல் அதிகமாக இருக்கிறது. தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் செய்து பணம் குவிக்கிறார்கள். எ.வ.வேலுவின் பின்னணி என்ன? அரசியல்வாதி என்கிற தகுதியை மட்டும் வைத்து கொண்டு பணம் சம்பாதிக்கிறார்கள்.
இலங்கை அரசால் பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளையும் தமிழக மீனவர்களையும் விடுவிக்க அனைத்து விதமான முயற்சிகளையும் இந்திய அரசு எடுத்து வருகிறது. விரைவில் நல்ல முடிவு வரும்.
தமிழகத்தில் பா.ஜ.க வினர் கொடியேற்றினால் கைது செய்கிறார்கள். நான் இதை ஒரு விதத்தில் ரசிக்கிறேன். இது கட்சி தொண்டர்களுக்கு உத்வேகம் கொடுக்கும். தமிழகத்தில் எவ்வளவு விஷயங்கள் இருக்கிறது. திமுக இன்று கொடிக்கம்பங்களை பற்றி பேசுகிறது. பாரதிய ஜனதா கட்சியை பார்த்து திமுக பயப்படுகிறது”, என்றார்.
பாஜகவும் அதிமுகவும் கள்ள உறவில் இருக்கிறார்கள் என்கிற முதலமைச்சரின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு:-
தேர்தல் நேரத்தில் 10 வருடம் பா.ஜ.க அரசு என்ன செய்து இருக்கிறோம் என்பதை தெரிவித்து தான் மக்களிடம் வாக்கு கேட்க போகிறோம். திமுகவை பொருத்தவரை 30 மாசம் என்ன செய்து இருக்கிறீர்கள் என மக்கள் கேட்பார்கள்”, என எந்த தொடர்பும் இல்லாமல் மழுப்பலான பதிலை அளித்தார்.
செய்தியாளர் சந்திப்பு முடிந்த பின்பு அண்ணாமலை செல்ல முயன்ற போது செய்தியாளர்கள், அவர் கையில் இரண்டு கடிகாரம் கட்டியிருப்பது குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அவர் ஒரு கடிகாரம் நேரம் பார்க்க எனவும் மற்றொன்று கடிகாரம் அல்ல அது எந்த நேரத்திற்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என காட்டும் கருவி என கூறிச் சென்றார்.