அப்பாவி இளைஞர் சமூதாயத்தினருக்கு மரண அடியை கொடுக்கும் கருவியாக போதை பொருள் கடத்தல் உள்ளதாக தெரிவித்துள்ள சென்னை சிறப்பு நீதிமன்றம், கஞ்சா கடத்திய மகாராஷ்டிராவை சேர்ந்த மூவருக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
வாகன சோதனை
மகாராஷ்டிராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு 200 கிலோ கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காரனோடை சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக வந்த மும்பை பதிவெண் கொண்ட 2 கார்களை சோதனையிட்டதில், 221 கிலோ கஞ்சா கடத்தப்படுவது கண்டறியப்பட்டது. மகாராஷ்டிராவை சேர்ந்த மூவர் ஆந்துராவிலிருந்து கடத்தி வந்த கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், மகாராஷ்டிராவை சேர்ந்த ஷேக் அன்சார், ஷேக் அகமது, சுஷீல் தாக்கர் ஆகியோரை கைது செய்தனர்.
2 லட்சத்து 40 ஆயிரம் அபராதம்
இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா, கஞ்சா கடத்தப்பட்டது நிரூபணம் ஆவதாக கூறி, மூவருக்கும் தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 2 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் என மொத்தமாக 7 லட்சத்து 20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், நீதிபதி தன் தீர்ப்பில், அப்பாவி இளைஞர் சமூதாயத்தினருக்கு மரண அடியை கொடுக்கும் கருவியாக போதை பொருள் கடத்தல் உள்ளது என்றும், சமூகத்தில் பெருத்த பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்