வக்ஃப் சொத்துக்களின் தரவு பதிவு.. “மே 31 கடைசி தேதி!”- அமைச்சர் ஷாஜகான்.. தவறினால் என்ன ஆகும்?

சரியான தகவல்களுடன் உமீத் தரவு இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும்
waqf property
Published on
Updated on
2 min read

கடந்த ஆண்டு ஜூன் 6-ம் தேதி நாடு முழுவதும் உள்ள வக்ஃப் வாரிய சொத்துகளை பதிவு செய்வதற்கான ‘உமீத்’ (UMEED) என்ற வலைதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த இணையதளத்தில் வக்ஃப் சொத்துகள் குறித்த  விவரங்களை மாநில அரசுகளும் வக்ஃப் வாரியங்களும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது. அனைத்து வக்ஃப் சொத்துக்களும் 6 மாதங்களுக்குள் விரிவான தகவலுடன் பதிவு செய்யப்பட வேண்டும் என மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்திருந்தார். இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் 5 தேதி வரை தரவுகளை பதிவு செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டது. 

மத்திய அரசு வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்து நாடாளுமன்றத்தின் 2 அவைகளிலும் நிறைவேற்றியது. இதைத் தொடர்ந்து வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றுவதற்காக புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து இணையதளம் தொடங்குவதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.

கொடுக்கப்பட்ட காலத்துக்குப் பிறகு, பதிவு செய்யப்படாத சொத்துக்கள் சர்ச்சைக்குரியதாக கருதப்படும். சொத்துக்களின் அளவு மற்றும் புவிசார் குறிச்சொற்கள் கொண்ட இடங்கள் உள்ளிட்ட விரிவான விளக்கங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.  இந்த இணையதளத்தில் ஒரு வக்ஃப் சொத்து பதிவு செய்யப்பட்ட பின்னர் அதற்கு 17 இலக்கங்கள் கொண்ட பிரத்யேக பதிவு எண் வழங்கப்படும். அந்த எண் மூலம் அந்த சொத்து எந்த மாநிலம், மாவட்டம், தாலுகாவில் உள்ளது, அதன் பரப்பளவு போன்ற விவரங்களை கண்டறியலாம் என மத்திய அரசு தெரிவித்தது. 

தமிழகத்தில் தேர்தல் காலம் தொடங்கியதையடுத்து, ஏப்ரல் 23 தேர்தல் நடைபெற்றது. மே 4 தேதி வெளியான தேர்தல் முடிவுகளில் பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றி விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அதையடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு, அமைச்சரவை விரிவாக்கம் என இன்னும் முடியாமல் நீள்கிறது தேர்தல் அலை. அதையடுத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சியின் பாபநாசம்  தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஷாஜகான் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக மே 22 தேதி பதவியேற்றார். தேர்தல் காரணமாக வக்ஃப் நிறுவனங்கள் குறித்த தரவுகள் பதிவிட தாமதமானதால் தற்போது அமைச்சர் ஷாஜகான் அது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அறிவிப்பில், உமீத் சட்டம் 1995ன்படி அனைத்து வக்ஃப் நிறுவனங்கள் சம்பந்தமான தகவல்களை உமீத் தரவுத்தளத்தில் 05.12.2025 வரை பதிவு செய்திட கால அவகாசம் அளிக்கப்பட்டதாகவும,  இப்பணி குறிப்பிட்ட நாளுக்குள் நிறைவு செய்யப்படாததால் தமிழ்நாடு வக்ஃப் தீர்ப்பாயம் மூலம் 6 மாதங்களுக்கு கால நீட்டிப்பு செய்து பெறப்பட்டு 06.06.2026க்குள் முடிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இன்னும் பல வக்ஃப் நிறுவனங்கள் பதிவு செய்யப்படாத காரணத்தால், சம்பந்தப்பட்ட வக்ஃப் நிர்வாகிகள் 31.05.2026க்குள் தங்களது வக்ஃப் நிறுவனங்களின் அனைத்து விபரங்களையும் சரியான தகவல்களுடன் உமீத் தரவு இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும் என மாண்புமிகு தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் கேட்டுக்கொண்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com