

நடிகர் தனுஷின் டெல்லி பயணம் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் அவர் தனது ரசிகர்களைச் சந்தித்து, ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றியதுதான் இதற்கு முக்கியக் காரணம்.
2026 தேர்தலில் நடிகர் விஜய் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற பிறகு, அடுத்தடுத்து நடிகர்கள் தங்களது ரசிகர்களைச் சந்தித்து வருகின்றனர். ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட சிலர் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளனர்.
நடிகர்கள் அரசியலுக்கு வருவது புதிய டிரெண்ட் அல்ல. எம்.ஜி.ஆர். தொடங்கிய அதிமுக, தமிழ்நாட்டை நீண்டகாலம் ஆட்சி செய்த கட்சிகளில் ஒன்றாக உள்ளது.
முந்தைய தலைமுறை நட்சத்திரங்களில் ரஜினி அரசியலில் இருந்து பின் வாங்கினார். கமல் அரசியலுக்கு வந்தும் பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை. இந்த நிலையில் விஜய்யின் அரசியல் எழுச்சியால் மீண்டும் கோடம்பாக்கத்தில் அரசியல் சலசலக்கிறது. நடிகர்கள் தங்களுக்கு வரும் கூட்டத்தை வாக்கு வங்கியாக கருதத் தொடங்கிவிட்டனர்.
அடுத்தடுத்து நடிகர்கள் தங்களது ரசிகர்களைச் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், தனுஷ் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது நற்பணி இயக்கத்தை 2031 சட்டப்பேரவைத் தேர்தலைக் குறிவைத்து அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான திட்டத்தை அவர் தொடங்கிவிட்டதாகக் கூறப்பட்டது. கட்சியின் பெயர் மற்றும் அதிகாரப்பூர்வக் கொடியைத் தீர்மானிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகின.
நற்பணி மன்றத்திலும் மாவட்டந்தோறும் நிர்வாகிகளை நியமித்து, வட்டம் மற்றும் பகுதி அளவில் அமைப்புக் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் அமைதியாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அரசியல் ஆர்வமுள்ள பலரும் நிர்வாகப் பொறுப்புகளைக் கைப்பற்றுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தனுஷ் அரசியலுக்கு வந்தால், குறிப்பிட்ட சமூகத்தினரின் வாக்குகளும் தமிழகம் முழுவதும் பரவியுள்ள ரசிகர் பலமும் அவருக்குக் கிடைக்கக்கூடும் என்பதால், அதிமுக சார்பில் அவருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.
தனியாகக் கட்சி தொடங்கி அடித்தளத்திலிருந்து அமைப்பைக் கட்டியெழுப்புவதைவிட, எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சியின் மூலம் அரசியலில் அடியெடுத்து வைப்பது எளிதான வழியாக இருக்குமா என்றும் தனுஷ் சிந்தித்ததாகக் கூறப்பட்டது.
ஆனால், இந்தத் திட்டத்தைக் கைவிட்டு, தனுஷ் புதிய கட்சி தொடங்கும் முயற்சியிலேயே மீண்டும் கவனம் செலுத்தியுள்ளதையே அவரது டெல்லி பயணம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, யாருக்காகவும் தனது பொதுச்செயலாளர் பதவியில் ‘த’வைக்கூட விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்பதுதான் இதற்குக் காரணமாக இருக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் சலசலக்கப்படுகிறது.
டிடிவி தினகரன், சசிகலா போன்றோரை கட்சியில் இணைத்தாலே தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ எனச் சிந்திக்கும் பழனிசாமி, தனுஷுக்கு மிகக் குறைவான வாய்ப்புகளையே வழங்க முன்வந்ததாகக் கூறப்படுகிறது. இதுவே தனுஷ் மீண்டும் தனிக்கட்சி தொடங்கும் திட்டத்தின் பக்கம் திரும்பக் காரணமாக இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
தனுஷின் இந்த டெல்லி பயணம் அரசியல் தொடர்பானதா, கட்சிப் பதிவு அல்லது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து அவரது தரப்பில் இதுவரை எந்த உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை.
இருப்பினும், அவர் முக்கிய அரசியல் பிரமுகர்களைச் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், தனுஷின் அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், புதிய கட்சியின் பெயர், கொடி மற்றும் கட்சிப் பதிவு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா என அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்