
இன்று அன்புமணி தலைமையில் பாமக -வின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அன்புமணியின் தலைவர் பதவியை ஓராண்டுகாலம் நீட்டித்து பொதுக்குழுவில் தீரமானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென ராமதாஸால் நியமிக்கப்பட்ட மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதில், கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே மாதம் 28 -ம் தேதியுடன் நிறைவடைந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.
புதிய தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டு கடந்த மே மாதம் 30 -ம் தேதியில் இருந்து அவர் தலைவராக செயல்பட்டு வருவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில தலைவரின் பதவிக்காலம் முடிவடைந்தால் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மற்றும் கட்சி நிர்வாக பொறுப்பு உள்ளிட்டவை கட்சியின் நிறுவனருக்கே உள்ளது, என கடந்த ஜூலை ஏழாம் தேதி நடைபெற்ற மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதி கட்சியின் நலன் கருதி இரு தரப்பையும் நேரில் சந்தித்து நேற்று பேச அழைப்பு விடுத்திருந்தார், ராமதாஸ் காணொளி வாயிலாகவும் அன்புமணி நேரிலும் வந்து நீதிபதியிடம் பேசினர் பேச்சுவார்த்தை நடந்து முடிந்த பின்னர், அன்புமணி தலைமையிலான பொதுக்குழுவிற்கு தடை இல்லை என தீர்ப்பு வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இந்த சம்பவங்கள் குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த மூத்த பத்திரிகையாளர் மணி பேசுகையில், “அப்பா - மகன் சண்டை முடிவுக்கு வரும் என எதிர்பார்த்தோம், ஆனால் அது நடக்கவில்லை. தலைமுறை மாற்றம் தான் ஏற்பட்டிருக்கு, பொதுக்குழுவை கூட்டி மீண்டும் தலைவராகி கட்சியை கைப்பற்றிவிட்டார் அன்புமணி. பெரும்பாலான நிர்வாகிகள் அனுமணியோடுதான் இருக்கின்றனர், ஏற்கனவே 40% ஓடுகள் விஜய் பக்கம் சென்றுவிட்டது என்று சொல்கிறார்கள், பாமக கொஞ்சம் கொஞ்சமாக கரைந்துகொண்டு இருக்கிறது என்பதுதான் உண்மை. மேலும் கட்சி பிரச்சனையை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வது வீண். ஏற்கனவே ஓபிஎஸ் விஷயத்திலே பார்த்தோம். மேலும் கட்சி, பணம், தொழில்நுட்பம் எல்லாமே அன்புமணியிடம் தான் உள்ளது. ஆனால் ஓட்டு யாரிடம் உள்ளது என்பதுதான் முக்கிய கேள்வி. ஏனெனில் தந்தை - மகன் இருவரும் சேர்ந்து கட்சிக்கு கொள்ளி வைத்துவிட்டனர் என்பதுதான் உண்மை” என பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.