

நடிகரும், தவெக தலைவருமான விஜய், கடந்த மாதம் கரூரில் நடந்த தனது கட்சிப் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலியான 41 பேரின் குடும்பத்தினரை நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அனைவரும் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில், இந்த சந்திப்பு நடந்து முடிந்த நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு பரபரப்பான தகவல் வேகமாகப் பரவியது.
அதாவது, ஆறுதல் சொல்வதற்காகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இருந்த அறைக்குச் செல்வதற்குப் பதிலாக, நடிகர் விஜய் தவறுதலாக வேறு ஒரு அறைக்குள் நுழைந்துவிட்டாராம். அந்த அறையில் உல்லாசமாக இருக்க வந்த ஜோடிகளை, அவர்களும் பாதிக்கப்பட்ட குடும்பம் என்று நம்பி தெரியாமல் அவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாகவும் ஒரு கதை கிளம்பியது.
மேலும், ஒரு பிரபல தமிழ் தொலைக்காட்சி செய்தி நிறுவனத்தின் பெயர் கொண்ட ஒரு போலிச் செய்தி கார்டும் (Fake News Card) இணையத்தில் வலம் வந்தது. அதில், "விஜய் அந்த இளம் ஜோடி காலில் தவறுதலாக விழுந்ததாக தகவல்" என்ற ரீதியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுபோன்ற செய்தி கார்டுகள் பரவியதால், ஒரு உண்மைச் செய்தி போல பலரும் நம்பி அதைப் பகிரத் தொடங்கினர். சிலர் வேண்டுமென்றே விஷமத்தனமாக இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவது போல் தெரிந்தது. ஆனால், இது முழுக்க முழுக்கப் பொய்யான தகவல் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், அந்தக் குறிப்பிட்ட தொலைக்காட்சி நிறுவனமும், தாங்கள் அப்படியான எந்தச் செய்தியையும் வெளியிடவில்லை என்று உடனடியாக விளக்கம் அளித்தது. இதன் மூலம், விஜய் இளம் ஜோடி காலில் விழுந்ததாகப் பரவிய செய்தியும், அந்தச் செய்தி அட்டையும் வதந்தி மட்டுமே என்பது தெளிவாகியது.
இந்த வதந்தி குறித்து நமது மாலை முரசு நாளிதழ் சார்பில், நேற்றைய சந்திப்பு நடந்தது குறித்து விசாரித்ததில், முதலில் நடிகர் விஜய் எல்லா அறைக்கும் சென்று தனித்தனியாக யாரையும் பார்க்கவில்லை என்று தெரியவந்துள்ளது. அதாவது, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை அவரவர் அறைகளுக்குச் சென்று விஜய் சந்திக்கவில்லை. அவர் ஒரு தனி அறையில் இருந்து நிலையில், ஒவ்வொரு குடும்பமும் அங்கு அழைத்து வரப்பட்டு அவர்களை விஜய் சந்தித்ததாகவே கூறப்படுகிறது. இந்த நடைமுறையிலிருந்தே, விஜய் எந்த அறைக்கும் தவறுதலாகச் செல்லவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அதனால், அவர் வேறு ஒரு அறைக்குள் தவறுதலாக நுழைந்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாகப் பரவிய வதந்திகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்பது தெளிவாகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.