
2026 -ஆவது சட்டமன்ற தேர்தல் தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே சொல்லலாம். இந்த தேர்தல் களத்தில் புது வரவு என்றால் அது ‘தமிழக வெற்றி கழகம்’ தான். விஜய் -ன் அரசியல் பிரவேசம், ஆதவ் அர்ஜுனா பிரஷாந்த் கிஷோர் ஆகியோரின் பங்களிப்பு என நல்ல ஒரு பப்ளிசிட்டியோடே வந்தது.
விஜய் அரசியலில் குதிப்பார் என்று நினைத்தது இன்று நேற்றல்ல 2013 ஆம் ஆண்டு தலைவா படம் வெளியாகி “time to lead” என கேப்ஷன் வைத்து அதற்காக அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை கடுப்பேற்றி மன்னிப்பு கேட்ட விவகாரமெல்லாம் அவரின் அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தின. ஆனால் அவரோ “ஓடு மீன் ஓட உறுமீன் வருமென” காத்திருந்த கொக்குபோல காத்திருந்து அரசியலில் குதித்துள்ளார்.
அரசியல் எதிரியாக திமுக -வையும் கொள்கை எதிரியாக பாஜகவையும் முன்னிருத்தி தன் அரசியல் பயணத்தை துவங்கியுள்ளார்.
தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் முழுமூச்சாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் விஜய், தவெக சார்பில் மதுரையில் மிகப்பெரிய 2 -வது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது.
மாநாடு துவங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னரே அரங்கம் மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது. 3.30 மணிக்கு மேல் விழா மேடைக்கு வந்த விஜய்
உள்ளே நுழைந்ததும், ‘உங்கள் விஜய்’ பாடல் ஒலித்தது. அந்த பாடலை விஜய் பாடியிருந்தார்.
தொடர்ந்து மேடையில் இருந்து இறங்கி மக்கள் மத்தியில் ராம்ப் வாக் சென்று தொண்டர்களை உற்சாகப்படுத்திய பின்னர், விஜய் பேச ஆரம்பித்தார்..
“சிங்கம் ஒரு பெக்யுலர் ஆன விலங்கு.. வேட்டையாடத்தான் வரும். வேடிக்கை பார்க்கலாம் வராது. சிங்கத்துக்கு தனியாவும் இருக்க தெரியும், கூட்டமாவும் இருக்க தெரியும். தனியா வந்துதான் தண்ணி காட்டும். ‘A lion is always a lion’’ 2 ஆவது மாநில மாநாடு ’வாகை சூடும் வரலாறு திரும்புகிறது’ என்ற பேர்ல நடத்துறோம். அதுக்கு காரணம் இருக்கு. கடந்த காலங்களை போலவே இப்போதும் நடக்க போகுது. விக்ரவாண்டியில நடந்த முதல் மாநாடு தமிழக அரசியலின் தட்பவெப்பத்தையே மாத்துச்சு. சினிமா என்னும் கலை ஆயுதத்தின் வாயிலாக சமூக நீதிக்காக, சமத்துவத்திற்காக, மதச்சார்பின்மைக்காக ஒலிக்கும் குரலா இருக்கோம்"என விஜய் பேச பேச மக்கள் ஆரவாரத்தில் துள்ளி குதித்தனர்.
தொடர்ந்து பேசிய அவர், “என்கிட்ட நெறைய ஜோசியம் சொன்னாங்க.. அவரே வரல.. இவரே வரல… விஜய் மட்டும் எப்படி வருவாருனு ..என்னென்னவோ சொன்னாங்க.. அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு இவரால மாநாடு லா நடத்த முடியாது அப்டினு சொன்னாங்க. இப்போ புதுசா வேற ஒன்னு சொல்றாங்க ஆட்சியெல்லாம் பிடிக்க முடியாதுனு, இவரு என்ன நேரா ஷூட்டிங் -ல இருந்து வந்து ஜெயிச்சிடுவாரான்னு கேக்குறாங்க. இப்போ என்னடானா கூட்டம் எல்லாம் ஓகே தான் அது எப்படி ஓட்டா மாறும்? -னு கேக்குறாங்க
ஆனால் உங்கள் ஆதரவுதான் எனக்கு கிடைக்கப்போற ஓட்டா.. மக்கள் விரோத சக்திக்கு எதிரான வேட்டா.. நம்மள கோட்டைக்கு கூட்டிட்டு போற ரூட்டா... மாறப்போகுது.
அரசியல் ஆதாயத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி இல்லங்க நம்ம கட்சி. கொள்கைக்காக துவங்கப்பட்ட கட்சி. கொள்கை கோட்பாடுகளோடு நமது கொள்கை தலைவர்களுடைய வழிகாட்டுதலோடு துவங்கப்பட்ட கட்சி.
நமது ஒரே கொள்கை எதிரி பாஜகதான். ஒரே அரசியல் எதிரி திமுக தான். அண்டர்கிரவுண்டில் ஆதாயத்திற்காக கூட்டணி வச்சிக்கிட்டு வேலைபார்க்கும் கட்சி தவெக இல்லை. இந்தியா முழுக்க இருக்க தாய் தமிழ் உறவுகள் எல்லாரும் என்னை விஜி, தளபதி, தளபதி விஜய் -னு சொந்தம் கொண்டாடும் போது பாசிச பாஜக கட்சியுடன் கள்ள கூட்டணி வைத்துக்கொள்ள நாம் என்ன உலகமகா ஊழல் கட்சியா.? நான் உங்ககிட்ட இன்னோரு விஷயம் சொல்ற.. நாம யாருங்கிறத சொல்ற.. நாம் யார் என்றால் இந்தியாவின் மாபெரும் மக்கள் சக்தி கொண்ட வெகுஜன மக்கள் படை.
மக்கள் படை நம்மோடு இருக்கும்போது அடிமை கூட்டணியோடு நாம் ஏன் சேர வேண்டும்.? நம்மை நம்பி வருபவர்களுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு உண்டு. உடனே யாரோடு என்று எல்லாம் கேள்வி எழுப்பாதீர்கள். வருகிற 2026 -ல் 2 கட்சிகளுக்கு இடையேதான் போட்டியே ஒன்னு TVK இன்னொன்னு Dmk என்று பேசினார்.
பேசிக்கொண்டிருக்கும்போதே எம்.ஜி.ஆர் -ன் மிகவும் புகழ்பெற்ற பாடலான “‘எதிர்காலம் வரும் என் கடமை வரும்” என பாடிய விஜய் தொடர்ந்து பேசுகையில்
“பிரதமர் மோடி ஜி அவர்களே 3-ஆவது முறையும் ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரத்தை நீங்கள்தானே வைத்துளீர்கள். நீங்கள் ஆட்சிக்கு வந்தது எல்லாருக்கும் நல்லது செய்யவா? இல்லை இஸ்லாமியர்களுக்கு எதிரா சதி செய்யவா? எங்கள் தமிழக மீனவர்கள் 800 -க்கும் மேற்பட்டோர் இலங்கை கடற்படையால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளனர் . எங்கள் மீனவர்கள் பாதுகாப்புக்காக அந்த கச்சத்தீவை மீட்டு கொடுங்கள்.
அப்புறம் உங்கள் வரட்டு பிடிவாதத்தால் நீங்கள் கொண்டு வந்த ‘நீட்’ தேர்வை ரத்து செய்யுங்கள். மக்களை ஏமாற்ற நேரடியாக பாசிச பாஜக அடிமை கூட்டணி ஒன்னு, உங்களின் மைனாரிட்டி ஆட்சியை ஓட்ட ஆர்.எஸ்.எஸ் குடும்பம் னு ஒன்னு வெச்சிக்கிட்டு இப்படி மக்கள் சக்தி இல்லாத அடிமை கட்சிகளை ஏமாத்தி 2029 வரை டூர் போகலாம் என்கிற எண்ணத்தில் இருக்காதீர்கள். தாமரை இலையில தண்ணியே ஒட்டலை தமிழகம் மட்டும் எப்படி ஒட்டும்”
சங்கம் வளர்த்து தமிழ் வளர்த்த எங்க கீழடி தமிழ் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், எப்போதும் அழிக்க முடியாது, அதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்” என கூறினார்.
தொடர்ந்து எம்.ஜி.ஆர் -ஐ பற்றி பேசிய விஜய், “எம்.ஜி.ஆர் என்றால் யாருனு தெரியும்ல.. அவர் மாஸ் என்னனு தெரியும்ல..அவர் ஆரம்பித்த அந்த கட்சி இப்போ எப்படி இருக்கு? அதன் நிலை என்ன?பல விஷயங்களை வெளியில் சொல்ல முடியாமல் தொண்டர்கள் தவிக்கின்றனர். வருகிற தேர்தலில் யாரை தேர்வு செய்யணும்னு அந்த அப்பாவி தொண்டர்களுக்கு தெரியும்.
தமிழ்நாட்டுல இப்படி பொருந்தா கூட்டணி இருப்பதால்தான் திமுக பாஜக உடன் கள்ள உறவு வைத்துக்கொண்டு அலைகிறது. ‘Stalin Uncle this is very wrong uncle’ , நீங்க நடத்துற ஆட்சியில பெண்கள், குழந்தைகள், பணியாளர்கள், சுற்றுச்சூழல் என யாருக்காவது எதற்காவது பாதுகாப்பு இருக்கா? சொல்லுங்க Uncle.. உங்க ஆட்சியை பார்த்து வாயே இல்லாத ஊரும் வயிறு வலிக்க சிரிக்கிறது. மக்களே நீங்கள் சொல்லுங்கள்..ஆட்சிக்கு வந்தால் செய்வோம் செய்வோம் என்று சொன்னார்களே செய்தார்களா!? சொல்லுங்கள்” என பேசியிருந்தார். உண்மையில் அவரது பேச்சு தமிழக அரசியல் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்ல வேண்டும்.
முதல்வரை அப்பா என அழைத்ததற்கும், இதுவரை தாக்காத அதிமுக -வை இப்போது தாக்கியிருப்பதும் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில் விஜய் -ன் பேச்சு குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த பத்திரிகையாளர் மணி பேசுகையில், “விஜய் உண்மையில் முதல்வரின் ‘அப்பா’ இமேஜை உடைத்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். மு.க.ஸ்டாலினின் ‘அப்பா’ இமேஜ் பலகட்ட பி.ஆர்.ஓ -க்களை வைத்து செயற்கையாக உருவாக்கப்பட்டது. கலைஞர் -க்கு இயல்பாக வந்தது. ஜெயலலிதா ‘அம்மா’ என்ற ஒரு இமேஜை உருவாக்கினார். பெண் என்பதால் மக்களும் அந்த பெயரை வாஞ்சையோடு அழைத்தனர், ஆனால் ஸ்டாலின் இமேஜ் செயற்கையானது.
அந்த இமேஜை இன்று விஜய் உடைத்திருக்கிறார், மேலும் அதிமுக -வை கடுமையாக தாக்கியிருக்கிறார். அது முதல் மாநாட்டில் நடக்கவில்லை. ஆனால் இப்போது அடிமை கூட்டணி என விமர்சித்திருப்பது, அதிமுக -விற்கும் தூக்கமில்லாத இரவுகளை தந்திருக்கிறது.
ஆனால் விஜய் ஒரு விஷயத்தில் கள்ள மவுனம் சாதிக்கிறார், அதுதான் ‘ஆணவப்படுகொலைகள் பற்றி பேசாதிருப்பது’ பொதுவெளியில் திமுக அரசாங்கத்தை எதிர்த்து அஜித் குமாரின் மரணத்திற்கு நீதி கேட்ட விஜய் ஏன் கவின் மரணத்தில் மவுனம் சாதிக்கிறார் என்று புரியவில்லை. ஆனால் இது ஆபத்தான போக்கு ” என பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.