

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி, தலைமைப் பண்பு குறித்து பேசிய கருத்துகள் முதலமைச்சர் விஜய்யைக் குறிவைத்து பேசப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதற்கு இணையத்தில் தவெக ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர். இந்த நிலையில், விஜய் டிவி நிறுவனம் இந்தச் சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளது.
“Bigg Boss தமிழ் சீசன் 10 ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டுமே. நிகழ்ச்சியில் இடம்பெறும் உரையாடல்கள், கருத்துகள் அனைத்தும் நிகழ்ச்சியை மையப்படுத்திய சூழலுக்கு உட்பட்டவையே. அவற்றை நிகழ்ச்சிக்கு வெளியே உள்ள எந்தவொரு நபர், அமைப்பு அல்லது கொள்கையுடன் தொடர்புபடுத்திப் பார்க்கக் கூடாது” என விஜய் டிவி தெரிவித்துள்ளது.
மேலும், நிகழ்ச்சியில் இடம்பெறும் எந்தவொரு கருத்தும் நிகழ்ச்சிக்கு வெளியே உள்ள நபர், அமைப்பு அல்லது சூழ்நிலையை ஆதரிப்பதாகவோ, விமர்சிப்பதாகவோ அல்லது பிரதிபலிப்பதாகவோ கருதக் கூடாது என்றும் விளக்கம் அளித்துள்ளது.
பிக்பாஸ் போட்டியாளர் ஒருவரைக் கண்டிக்கும் விதமாகப் பேசிய விஜய் சேதுபதி, “லீடர்ஷிப் (தலைமைத்துவம்) என்றால் என்னவென்றே தெரியாமல், வாய்க்கு வந்த வாக்குறுதிகளை அள்ளிவிட்டு, பிரச்னை வரும்போது எதிர்க்கட்சியின் மீது பழியைப் போட்டுவிட்டு தெறித்து ஓடுவது தலைமைப் பண்பல்ல!” எனக் கூறினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்