டிஐஜி விஜயகுமாரின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம்..!

டிஐஜி விஜயகுமாரின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம்..!
Published on
Updated on
1 min read

கோவையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமாரின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

கோவை சரக டி.ஐ.ஜி.யாக பதவி வகித்து வந்த விஜயகுமார், தனது வீட்டில், பாதுகாவலரின் துப்பாக்கியால்  தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கோவை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட டிஐஜி விஜய குமார் உடலுக்கு, அமைச்சர் சாமிநாதன், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய அவர், டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கு அவரின் மன அழுத்த பிரச்சனையே காரணம் என்றார். 

இதன் பின்னர், டிஐஜி விஜயகுமாரின் உடல், அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்து. அங்கு திரண்டிருந்த உறவினர்கள், காவல்துறையினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் விஜயகுமாரின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 

அரசு சார்பில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அஞ்சலி செலுத்தினார்.தொடர்ந்து , காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு, திண்டுக்கல் சரக டிஐஜி அபிநவ் குமார் உள்ளிட்ட காவல்துறையினர் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

பொது மக்கள் அஞ்சலிக்கு பிறகு  அவரது அவரது இறுதி  ஊர்வலம் தொடங்கியது. காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால், மேற்கு மண்டல ஐஜி சுதாகர்  உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அவரது உடலை வீட்டில் இருந்து தோளில் சுமந்து சென்று அமரர் ஊர்தியில் ஏற்றினர்.  பின்னர் தேனி நகராட்சிக்கு உட்பட்ட மின் மயானத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து, 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் டிஐஜி விஜயகுமாரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

டிஐஜி விஜயகுமாரின் இறுதிச் சடங்கில் உறவினர்கள், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com