கனகசபை தரிசனம்; "மரபை மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரமில்லை" அறநிலையத்துறை வாதம்!

கனகசபை தரிசனம்; "மரபை மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரமில்லை" அறநிலையத்துறை வாதம்!
Published on
Updated on
1 min read

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்யும் நடைமுறை பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும்  நிலையில், அதை மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை என இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம், நடராஜர் கோவில்  கனகசபையில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து  2022ம் ஆண்டு மே 17ம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவுக்கு பதிலளித்து தமிழக இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், சோழ மன்னர்களால் உருவாக்கப்பட்டு, பொது மக்களின் பங்களிப்பின் மூலம் நிர்வகிக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோவில், ஒரு பொது கோவில் எனவும், தீட்சிதர்களுக்கு சொந்தமானதல்ல எனவும் சென்னை உயர்நீதிமன்றமும்,  உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கனகசபையில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்யும் நடைமுறை ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்பட்டு வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக  கனகசபை தரிசனம் நிறுத்தப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், கனகசபையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதியளிக்க உத்தரவிடக் கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பக்தர்களை கனகசபையில் இருந்து தரிசனம் செய்ய அனுமதிப்பது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும் என 2022 ஏப்ரல் 20ல் உத்தரவிட்டிருந்தது என பதில் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின் அடிப்படையில், கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டதை கருத்தில் கொண்டும், பொதுமக்கள், தீட்சிதர்களுடன் கலந்தாலோசித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் அளித்த அறிக்கைகளை பரிசீலித்து, கனகசபையில் பக்தர்கள் தரிசனத்துக்கு  அனுமதியளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டதாக பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

கனகசபையில் தரிசனம் செய்யும் நடைமுறை பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும்  நிலையில்,  அதை மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் கனகசபை தரிசனத்துக்கு அனுமதி அளித்ததை எதிர்ப்பது ஆலய பிரவேச சட்டத்துக்கு எதிரானது எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனகசபையில் தரிசனம் செய்ய அனுமதித்த அரசாணை மூலம் தங்கள் உரிமை பாதிக்கப்பட்டதாக தீட்சிதர்கள் தெரிவிக்காத நிலையில், எந்த தகுதியும் இல்லாத இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என பதில்மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பதில்மனுவுக்கு பதிலளிக்க, மனுதாரர் தரப்புக்கு அவகாசம் வழங்கிய தலைமை நீதிபதிப கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, விசாரணையை டிசம்பர் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com