“பள்ளி மாணவர்களின் குடிநீரில் மனிதக்கழிவு” - தொட்டிக்குள் கிடந்த மிரட்டல் கடிதம்.. மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு!

குடிநீர் தொட்டியில் மர்ம நபர் ஒருவர் எச்சரிக்கை துண்டுச்சீட்டையும் ஒட்டிச் சென்றிருந்ததாக கூறப்படுகிறது...
school tank
school tank
Published on
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே அரசு பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மர்ம நபர் ஒருவர் மனிதக்கழிவை கலந்ததுடன், மிரட்டல் வாசகங்கள் அடங்கிய துண்டுச்சீட்டையும் ஒட்டிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே தங்கம்மாபட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்களின் குடிநீர் தேவைக்காக பள்ளி கட்டிடத்தின் மாடியில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று குடிநீர் தொட்டியை ஆய்வு செய்தபோது, அதற்குள் பிளாஸ்டிக் கவரில் மனிதக்கழிவு இருந்தது தெரியவந்தது. மேலும், குடிநீர் தொட்டியில் மர்ம நபர் ஒருவர் எச்சரிக்கை துண்டுச்சீட்டையும் ஒட்டிச் சென்றிருந்ததாக கூறப்படுகிறது. அந்த துண்டுச்சீட்டில், “என் ஒரு குடியை கெடுத்தால் பள்ளிக்கூடத்தில் அத்தனை பிள்ளைகள் குடியையும் கெடுத்து விடுவேன். சும்மா விடமாட்டேன். பள்ளி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை” என மிரட்டல் வாசகங்கள் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

இதனை பார்த்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்து பள்ளி ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பள்ளி நிர்வாகம் சார்பில் வடமதுரை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், வேடசந்தூர் தாசில்தார் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளும் பள்ளிக்கு நேரில் வந்து குடிநீர் தொட்டியை ஆய்வு செய்தனர்.

இதையடுத்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, குடிநீர் தொட்டி மற்றும் பள்ளி வளாகத்தில் இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், குடிநீர் தொட்டியில் இருந்த தண்ணீரை மருத்துவக் குழுவினர் ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். இதனிடையே, பள்ளி தலைமையாசிரியை சந்திரபிரபா அளித்த புகாரின் அடிப்படையில் வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் கைப்பற்றி, குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவை கலந்த மர்ம நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டதுடன், பள்ளி நிர்வாகத்திற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் துண்டுச்சீட்டு ஒட்டப்பட்ட சம்பவம் தங்கம்மாபட்டி பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com