சென்னையில் முதல் முறையாக குழாய் மூலமாக வீடுகளுக்கு நேரடியாக இயற்கை எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி நாடுகளில் குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யப்படுகிறது. இதனை முன்மாதிரியாக கொண்டு, நாடு முழுவதும் காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக டெல்லி, மும்பை உள்ளிட்ட பெரும் நகரங்களில் குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அதற்கு அடுத்ததாக, தமிழ்நாட்டில் சேலம், நாகப்பட்டினம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. சென்னையில் முதன் முறையாக இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு டோரண்ட் கேஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது.
அண்ணா நகரில் உள்ள மெட்ரோ சோன் அடுக்குமாடி குடியிருப்பில் குழாய் மூலமாக வீட்டு உபயோக இயற்கை எரிவாயு திட்டம் என்பது தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதை தொடர்ந்து, அரும்பாக்கம், கோயம்பேடு, மூலக்கடை உள்ளிட்ட பகுதிகளுக்கு விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, சென்னை எண்ணுார் துறைமுகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம், எல்.என்.ஜி, எனப்படும் திரவநிலை இயற்கை எரிவாயு முனையம் அமைத்துள்ளது. இதற்கு, வெளிநாடுகளில் இருந்து கப்பலில் திரவ நிலையில் எரிவாயு வருகிறது. இந்த எரிவாயு, வீடுகளுக்கு குழாய் வழித்தடத்திலும், வாகனங்களுக்கு சி.என்.ஜி என்ற பெயரிலும் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும், எல்.பி.ஜி, சிலிண்டர் விலையை விட, குழாய் மூலமாக வீட்டு உபயோக இயற்கை எரிவாயு விலை 30 சதவீதம் குறைவாக வரும் என தெரிவிக்கிறார் டோரண்ட் கேஸ் உதவி பொது மேலாளர் விநாயகமூர்த்தி.
இது குறித்து அவர் பேசுகையில், குழாய் மூலமாக எரிவாயு இணைப்பு பெறுவதற்கு வீட்டு வாடிக்கையாளரிடம் இருந்து, வைப்புத் தொகையாக 6 ஆயிரம் ரூபாயும், முன்பணமாக, 500 ரூபாயும், இணைப்பு கட்டணமாக, 590 ரூபாய் என வசூலிக்கப்படுகிறது. அதில், 6 ஆயிரத்து 500 ரூபாய் திரும்ப பெறக் கூடியதாக உள்ளது, என தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டணத்தை அளவீடு செய்வது போன்று, எரிவாயு பயன்பாட்டை அளவிடுவதற்காக மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதில் நுகர்வோரின் பயன்பாடு எளிதாக கணக்கெடுக்கப்படுகிறது. எரிவாயு சிலிண்டர் பயன்பாட்டை விட குழாய் மூலம் எரிவாயு இணைப்பு பெறுவது எளிமையாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மின்சார கட்டணம் போன்று 2 மாதங்களுக்கு ஒரு முறை இணைய வழியில் எரிவாயு கட்டணம் செலுத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு வீண் அலைச்சல் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க || மீண்டும் இலங்கைக்கு தனது விமான சேவையை தொடங்கிய ஏர் சைனா!