"ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக சவுக்கு சங்கர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு" வழக்கு நிராகரிப்பு!

Published on
Updated on
1 min read

அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷை விமர்சித்ததாக கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர சவுக்கு சங்கருக்கு அனுமதி வழங்க, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மறுத்து விட்டார்.

சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளார்.

இதுசம்பந்தமாக கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி நிருபர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, நீதிபதிக்கு எதிராக விமர்சனம் செய்ததாக கூறி, அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்  செய்ய அனுமதி கோரி,  சவுக்கு சங்கர், தலைமை வழக்கறிஞருக்கு மனு அளித்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்க  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மறுத்துள்ளதாகவும், ஆர்.எஸ்.பாரதியின் கருத்துகள் நீதித்துறையை களங்கம் விளைவிக்கும் வகையில் இல்லை எனவும், அது நீதிமன்ற அவமதிப்பு செயல் அல்ல என்றும் கூறி, சவுக்கு சங்கரின் மனுவை  தலைமை வழக்கறிஞர் நிராகரித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com